Thursday, June 24, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு


உலகச் செந்தமிழ் மாநாடு.

முதலில் உங்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை. நான் தமிழில் பட்டமோ,பட்டயமோ வாங்கியவனில்லை.என்னுடைய பள்ளி இறுதி வகுப்பிலும் அதற்கு முந்திய ஆண்டிலும் சிறப்புத்தமிழ் பாடத்திற்குப்பதிலாக விவசாயம் படித்தவன். அதனால் இலக்கணத்திலும் மேதை இல்லை. என்னைப்போன்ற சிற்றறிவாளர்களுக்கே தவறு என்று தோன்றும் வாக்கிய அமைப்புகளைத் தின,மற்றும் வாரப்பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும்,பொதுக்கூட்டங்களிலும் மற்றும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் அறிவிப்புக்களிலும் காணும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வாக்கியத்தை பன்மையில் ஆரம்பித்து ஒருமையில் முடிப்பதும், active voice ல் தொடங்கி passive voiceல் முடிப்பதும் அடிக்கடி காணப்படும் தவறுகள்..

பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் அல்லது கேட்டுக்கொள்கிறோம் என்பதற்குப் பதிலாக பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்என்கிறார்கள். பஞ்சாப் அணியும் தமிழ்நாடு அணியும் மோதுகின்றன என்பதற்குப்பதில் மோதுகின்றது என்கிறார்கள். . பஞ்சாப் அணியுடன் தமிழ்நாடு அணி மோதுகின்றது என்றும் சொல்லலாம்.

உச்சரிப்பில் இரண்டு சுழி ன வுக்கும் மூன்று சுழி ண வுக்கும், ற வுக்கும் ர வுக்கும், ல வுக்கும் ள வுக்கும், வேறுபாடே இல்லை. சொல்லப்போனால் சரியாக மாற்றி உச்சரிக்கிறார்கள்!

ஆங்கிலம் பேசக்கற்றுக்கொடுக்க பயிலகங்கள் இருப்பது போல் தமிழில் தவறில்லாமல் பேசவும் எழுதவும் பயிலகங்கள் தேவைப்படும்போல் இருக்கிறது. குறைந்தது தொலைக்காட்சி, மற்றும் ரேடியோ அறிவிப்பாளர்களுக்காவது இவை உபயோகப்படும். ஊடகங்கள் தவறாக எழுதவும் பேசவும் செய்யும்போது வளரும் குழந்தைகள் அவ்வாக்கியங்களில் உள்ள தவறுகளைத் தங்களையறியாமல் சுவிகரித்துக்கொள்கிறார்கள்.

திரைப்படப் பாடகர்கள் வேற்று மொழிக்காரர்களாக இருந்தாலும் உச்சரிப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து வாய்ப்பு தரவேண்டும்.

பெங்களூரில் “அப்படியாஎன்று கேட்பதற்குப்பதில் “ஆமாவாஎன்று கேட்பதைப்பார்த்திருக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் தவறான வார்த்தைப் பிரயோகங்கள் பாடப்புத்தகங்களிலும் காணப்படும் அவலம் வரும் என்ற அச்சம் எழுகிறது.

இன்றைய தினத்தந்தி(24-06-2010 வியாழக்கிழமை) கடலூர் பதிப்பில் முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தி : கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு; ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.செய்வினை, செயப்பாட்டு வினை என்று வேறுபாடு இல்லாமல் தொடக்கி வைத்தார் என்பதற்குப் பதில் தொடங்கி வைத்தார் என்று இருக்கிறது. இப்படியே போனால் வளத்துடன் என்பது வளமுடன் ஆனது போல் செய்வினைக்கும் செயல் பாட்டு வினைக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். வழக்கில் வந்துவிட்டால் தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படும். பின் தமிழ் செம்மொழியாய் சிறப்பது எப்படி? வழுவமைதி இதற்காகத்தானோ?

மாநாடு நடத்துவதாலும் கருத்தரங்கத்தில் கல்வியாளர்கள் கலந்துரையாடுவதாலும் தமிழின் தரத்தை உயர்த்திவிட முடியாது. பொதுமக்கள் பேசும் தமிழ் திருத்தமாகவும், இலகக்ணப்பிழை இல்லாமலும் இருந்தால்தான் செம்மொழி என்று பெருமை பேசுவதில் அர்த்தம் இருக்க முடியும், போக்குவரத்து விதிகளை மீறுவோர்க்கு சில தண்டனைகளும் அபராதங்களும் விதிப்பது போல் தமிழைத் தப்பு தப்பாக எழுதும்,பேசும் ஊடகங்களுக்கும் சில தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.குறைந்த பட்சம், தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கும் பண்பாவது வரவேண்டும். எஃப் எம் ரேடியோக்களில் நடக்கும் தமிழ்க்கொலை மிகுந்த தண்டைனைக்குரியது. பொருட்களில் கலப்படம் செய்வதுபோல் ஊடகங்கள் ஆங்கில வார்த்தைகளைச் சர்வசாதாரணமாகக் கலக்கும் போது வேதனையாக இருக்கிறது.அவசியமான இடங்களில் ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கது. சுலபமாகப் புரியக்கூடிய தமிழ் வார்த்தைகள் இருக்க, பேச்சுத்தமிழ் என்ற போர்வையில் செய்யும் கலப்படம் தண்டிக்கப்படவேண்டும். தமிழ் செம்மொழி நாட்டில் இதற்காக ஏதும் செய்வார்களா?

இறுதியாக, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எனறால் ஏதோ நிரடுகிறது. தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டபின் அதை செந்தமிழ் என்று சொல்வதுதானே முறை? (செம்மை+தமிழ்). இனியாவது உலகச் செந்தமிழ் மாநாடு என்று சொல்வார்களா?

நான் தேர்ந்த தட்டச்சன் அல்ல. என்வே இதில் உள்ள எழுத்துப்பிழைகளை என்னையும் ஒரு ஊடகவியாலானாகக்கருதி ஏற்றுக்கொள்ளவும்!