Thursday, July 2, 2009

1973 ல் எழுதிய கவிதைகள் 3

                              நான் என்னுடைய நண்பர் ஒருவருக்கு எழுதிய கவிதை வடிவிலான கடிதத்தில் மற்றொரு நண்பர் திரு ஷண்முகத்தை நலன் விசாரித்திருந்தேன். அதைப்படித்துவிட்டு அவர் அது என்னுடைய கவிதையா அல்லது வேறு கவிஞர் எழுதியதை நான் எடுத்தாண்டேனா என்று ஐயம் எழுப்பியிருந்தார். 

                              அதற்குப்பதிலாக நான் எழுதியது. Dear boss, I may have a few weaknesses, but plagiarism is not one of them. Just to prove my point I write some nonsense which no one else will claim as his own. 

 அன்பு ஷண்முகமே,ஆசைத் திருமுகமே,
 முறையாகத் தமிழைநான் படிக்கவில்லை, 
முழுதாக எதையும் நான் கற்கவில்லை.
 குறைகாண இயலாத குணக் குன்றில்லை
 நான் எழுதும் கவிதை,காவிய மில்லை. 
 என் பாடல் தவறென்றால், பொறுத்திருப்பேன், 
என் தகுதி குறைவென்றால்,சிரித்திருப்பேன். 
இன்னொருவன் என் பாடல் தனது என்றால்
எப்படியும் மறுத்துரைப்பேன். 
உமக்காக ஒரு கடிதம், கவிதை(?) வடிவில்.

   காதல், காதல் 

யானையைத் தடவிப் பார்த்து, 
யானையைப் பற்றிச் சொன்ன 
நண்பர்கள் கதையைப் போல- 
பொதுவாய்க் காதலைப் பற்றிச் 
சொல்லும் யார்க்கும், 
பார்வைக் கோணத்தில் மாற்றம்;
எனவே , ஒரு காதல் போல 
இன்னொன்று இல்லை; 
காதலன் வேறு,வேறு; 
காதலி வேறு,வேறு 
தூயவர் துய்க்கும் காதல்வேறு!

காதலென் றறியாது காதலில் வீழ்வோர், 
காதலில் மூழ்கிக்கொண்டு நட்பென்போர். 
உடல் தொடாக் காதலாக, 
உள்ளத்தில் பதிவார், சிலர். 
உணர்ச்சிக்கு வடிகாலாக, 
உடம்பால் இணைவார் பலர். 
என் காதல் வான் அளவு உயர்ந்த காதல் 
ஊனிலே உறைந்த காதல். 
நான் கொண்ட காதல் பற்றி 
சொல்ல இது நேரம் அல்ல;
இருந்தாலும், சில வரிகள்.

பள்ளிப் பருவத்தில் பெண்ணொரு புதிர், 
கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் வெளிச்சம். 
தெரிந்து கொள்ளும் ஆர்வமன்றி வேறல்ல. 
ஏதேதோ எண்ணங்கள், ஏக்கங்கள், 
எதிர்பார்ப்புக்கள், எஞ்ஞான்றும் உறுத்தல்கள், 
இறுதியில் ஏமாற்றங்கள்.

ப்ளாடோனிக் லவ் என்று போனதினால்,
இன்று ஃபிரண்டுகள் மட்டும் மிச்சம் ! 
ப்ராக்டிகல் லவ் என்று போயிருந்தால், 
ப்ரேசியர் அளவேனும் தெரிந்திருக்கும்!
 முட்டி நின்று பழகவரும் பெண்மை – 
அதை எட்டி நின்று பார்த்ததுதான் மடமை; 
தொட்டுப் பார்க்கவில்லை; பார்த் திருந்தால் 
கிட்டும் சுகமெல்லம் நினைவில் நிற்கும். 

எப்படியும் இக் கவிதை
எனதென்று ஒப்புக்கொள்வீர்;அன்றேல், 
இன்னொன்று 
எழுது வேன் நான்!

Saturday, June 27, 2009

1973ல் எழுதிய கவிதைகள்-2

உறவும்,பிரிவும்.

 சமூகத்தை எதிர்க்க இயலாதவர்கள் ஏன் காதலிக்கவேண்டும்? தோல்வி உறுதி என்று தெரிந்தும் ஏன் போராடவேண்டும்? அது ஒருவகை சோகம். என் நண்பருடைய இழந்த காதலை வைத்து அவருக்கு நான் எழுதிய கவிதை. 

 முன்னர் : 

பனிக்கட்டி,பாலிலே கலந்த பழக்கூழ் – 
அவள் இதழிலே ஊறும் தேன் நீர்- 
அவள் ஆசையாய் பார்க்கும் பார்வை, 
உன் நாக்கினில் ஐஸ் கிரீம் ஆகும்.

 பறவைக்குச் சிறகு வேண்டும் 
உயிருக்கு உறவு வேண்டும். 
உறவுக்கு அவள்தான் வேண்டும்
அவளென்றால் உன்னில் பாதி! 
பக்கம் அவள் இருந்தால் வேம்பும் இனிப்பென்பாய், 
விலகி அவள் சென்றுவிட்டால்,இனிய கனி கசப்பென்பாய்!
காலம் கருதாமல் உன் தோளில் சாய்ந்திருந்தாள், 
காலம் மாறியதோ ?வசந்தத்தின் பின்னே வந்தது என்ன? 

 பின்னர்: 

செல்வம் மிக உள்ளவனைக் கண்டாள் போலும்; 
காதலும் நட்பாய் மாறி,
நீயொரு அண்ணன் ஆனாய்! 
நினத்தபின் மறப்பதும்,
மறந்த பின் மறுப்பதும் 
உண்மையை மறைப்பதும்,
பெண்டிர் கடனே! 
உன்பக்கம் இல்லை யென்றால் - 
அவள் எதிரியின் பக்கம் தானே! 
ஆதரிக்கப்படாத அன்பு எல்லாம், 
அளவற்ற வெறுப்பாய் மாறும்! 

உறவுக்காய் ஏங்குவது
 இளமைத்தாகம்-
அவள் பிரிவைத் தாங்காது
துடித்துப்போகும். 
வெறுப்பினால் பார்க்கும் பார்வை
வென்னீரை வேரில் ஊற்றும்.

 மற்றவர் கருத்து:

காதலில் தோற்றுவிட்டால், என்ன ஆகும்? 
ஆசைகள்,பாசங்கள் எல்லாம் சாகும். 
அவிழ்ந்த மனம், இலக்கின்றி எங்கோ போகும். 
அங்கும்,இங்கும் காதலைத்தேடித் தோற்கும்.  
நினைவுகளை மறக்கவேண்டும்-இல்லை
நினைவின்றி நிம்மதியாய் இறக்கவேண்டும். 
”வெந்தணலில் வேகா உடம்பு- 
உற்றவர் கண்ணீர் சொட்டிரண்டு பட்டால் வேகும்”!
என்றெல்லாம் மற்றவர்கள் சொல்லலாகும். 

என் கருத்து: 

என்னை நீ கேட்டாயென்றால், 
வாழ்க்கையில் எதுவும் 
வாழ்வைவிடப் பெரிது இல்லை. 
ஒன்றுபோய் ஒன்று வரும்;
காயத்தைக் காலம் ஆற்றும். 

வன்ணத்துப்பூச்சியின், 
வரலாறு அறிந்தவனே, 
நடந்ததை மறந்து, கூட்டை உடைத்து வா,வா. 
புதிதாய் பிறப்பாய்,பழசை மறப்பாய்,
வாழ்வில் சிறப்பாய்! 

சொல்லாத காதலுக்குத் தோல்வி இல்லை, 
பிறவாத கவிதைக்குச் சாவே இல்லை. 
மண்ணுலகில் தேறாத காதல் எல்லாம்
 வின்ணுலகில் சேராதா?
 திருமணங்கள், அங்கேதானே
 நிச்சயக்கப் படுகின்றன !

Tuesday, June 23, 2009

தப்பும்,தவறும்!

                            பல நாட்களாக என்னை உறுத்திகொண்டிருந்த விஷயம் இது. புத்தகங்களில் காணப்படும் அச்சுப்பிழைகளை printer’s devil என்று குறிப்பிடுவது வழக்கம். தட்டச்சு செய்யப்பட்ட கடிதங்கள்,கட்டுரைகள் முதலியவற்றில் காணப்படும் தவறுகள் typographical mistakes எனப்படும். எழுதுபவர் தவறு செய்தாலும் டைபிஸ்ட் தவறு செய்ததாகத்தான் குறிக்கப்படும்!. 

                           அதேபோல் ஒரு அலுவலகத்தில் பெரிய அதிகாரியின் கையெழுத்தில் வெளிவரும் கடிதம்,குறிப்பு.,சுற்றறிக்கை இவற்றில் காணப்படும் தவறுகள் clerical error என்று அழைக்கப்படும்.ஒரு அதிகாரியால் எழுதப்பட்டு அதற்கு மேல் இரண்டு மூன்று அதிகாரிகள் சரிபார்த்து (!) வெளியிடப்படும் அறிக்கைகளில் உள்ள தவறுகளும் அலுவல் உதவியாளரின் தவறுகளாகத்தான் சித்தரிக்கப்படும். ஒரு அலுவலகத்தில் ஒரு தவறான குறிப்பை மேல் அலுவலகத்துக்கு அனுப்பி அங்கே அத்தவறு சுட்டிக்காட்டப்பட்டால் கீழே இருப்பவர்கள் “ it was sent by mistake” என்று பதில் எழுதிவிடுவார்கள். யாருடைய தவறு என்பது அலசப்படாமல் சிதம்பர ரகசியமாகப் பாதுகாக்கப்படும். 

                              செய்த தவறை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையும் அதற்காக வருந்தும் மனப்பாங்கும் அரிதாகிவிட்டது. கூடியவரையில் தவறுகளை மறைத்து சுத்தமாக (clean) காட்டிக்கொள்வதும்,கண்டுபிடிக்கப்பட்டால் அதை அடுத்தவர் தலைமேல் சுமத்துவதும்,பொறுப்பாளியாக்கப்பட்டால் செய்த தவறை நியாயப்படுத்துவது,அதுவும் முடியாதபோது அடுத்தவர் செய்த இதே போன்ற தவறை முன்னுதாரணமாகக்காட்டி தன்னுடைய தவறு ஒன்றுமே இல்லை என்பதாகக்காட்டுவதும் வழக்கமாகிவிட்டது.. கொள்கையை மாற்றிக்கொண்டு யாரிடம் வேண்டுமானாலும் கூட்டு வைத்துக்கொள்வார்கள். அதைக் காலத்தின் கட்டாயம் என்றோ அல்லது, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை,நிரந்தரப் பகைவனும் இல்லை என்றோ சப்பைக்கட்டு கட்டுவார்கள். கூட்டாளிகள் எதிராளிகளாகவும், எதிராளிகள் கூட்டாளிகளாகவும் மாறி மாறி வருவது சந்தர்ப்பவாதம்தான். 

                      தன்னுடைய கூட்டணியை முன்னேற்ற அணியாகவும், எதிரணியைப் பிற்போக்குவாதிகளின் கூட்டம் என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்வார்கள். இதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் எதிரணியினர் பேசிய பேச்சுக்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். சில கொள்கைப்பிரகடனங்கள் சிலகாலத்துக்கு மட்டும் சொந்த நலனுக்காகப் பாராட்டப்படும். பிறகு அதைக் கிடப்பில் போட்டு விடுவார்கள். எல்லாரும் அதை மறந்து விட்டாலும் தங்கள் சுயதேவைக்காக அவற்றைத் தூசு தட்டி எடுத்து அவற்றுக்காக தங்கள் உயிரையும் கொடுக்கத்தயார் என்று முழங்குவார்கள். காலங்கள் மாறும்போது மக்களின் மதிப்பீடுகளும்,நிலைப்பாடுகளும்,கொள்கைப்பிடிப்புகளும் மாறுவது இயற்கை. இதை ஏற்றுக்கொண்டு,தங்கள் முந்தைய நிலைப்பாடு தவறு என்று ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை இங்கு யாரிடமும் இல்லாமல் போனது பரிதாபம்.

                          மக்களாட்சியில் கட்சித்தொண்டர்களுக்கும் ஊழலில் பங்கு கிடைத்தால் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு “வாழ்க” போடும் மனப்பன்மை வந்துவிட்டது. பொது மக்களும், அரசு அலுவலகங்களிலும், மற்ற இடங்களிலும் காணப்படும், ஒழுங்கீனங்கள், தவறுகள், ஊழல்கள் இவற்றைப் பெரிதாக எண்ணாமல் பேரம் பேசி,குறைந்த செலவில் (லஞ்சம் என்று பொருள் கொள்க) தங்கள் காரியத்தை நிறைவேற்றி தங்கள் சாமர்த்தியத்தை தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்! எனவே தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை பழக்கவழக்கங்களாகி, பின்னர் நமது கலாசாரமாக மாறும் அவலத்தையும் பார்க்கிறோம். எம் ஜி ஆர் ஒரு படத்தில் ”தவறு என்பது தவறிச் செய்வது,தப்பு என்பது தெரிந்து செய்வது” என்று பாடுவார். இப்போது எல்லோரும் விவரமானவர்கள் . தெரிந்தே, (அடுத்தவர்க்குத் தெரியாமல்!) தப்பு செய்கிறார்கள்.

                                இவை தவறா, தப்பா என்று எனக்குத்தெரியவில்லை. இந்தப்பதிவில் உள்ள பிழைகளுக்கு நான் பயன்படுத்தும் கணினி தான் காரணம். அதற்கும் வயதாகிவிட்டது!

Tuesday, May 12, 2009

1973ல் எழுதிய கவிதைகள் - 1

நான் 1973-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் உடைந்து படுக்கையில் இருந்தபோது நேரிலும் கடிதம் மூலமும் ஆறுதல் சொன்ன நண்பர்களுக்கு நான் சில பதில் கடிதங்களை கவிதை வடிவில் எழுதினேன் .நகல் எடுத்து வைக்கவில்லை. ஆனால் முன் வரைவு (draft copy) சில நாட்களுக்கு முன் கிடைத்தது. அவற்றில் ஒன்று சில மாற்றங்களுடன் கீழே. (இது நண்பர் வடிவேலுவுக்கு எழுதியது)
இலக்கியமும்,இலக்கணமும்.

முட்டையா,கோழியா முதலெது அறிய 
முயன்ற மனிதர் தோல்வி கண்டார். 
இலக்கியம் இலக்கணம் இவற்றிலும் கூட 
முன்னது,பின்னது அறிந்தவர் இல்லை.
 இலக்கு உள்ளது இலக்கியம் – அதில் அழகு சேர்ப்பது 
இலக்கணம் என்பதென் எண்ணம்; 
எனவே இலக்கணம் மீறிய கவிதைகள் உண்டு.
 இங்கு சிலவரி எழுதிட வந்தேன் – 
இதில் இலக்கணமோ,இலக்கியமோ தேடவேண்டாம்

பெண்கள் என்றால் அழகுடன் இருப்பர்; 
அழகு அற்ற பெண்டிரும் உண்டு. 
 உடலின் அழகு,உருவெளித் தோற்றம்; 
பெண்மையின் குண நலன், பேரழகாகும்.
 இலக்கணம் இருந்தால் இனிமை உண்டு; 
இங்கே யாரும் மறுக்கவில்லை- எனினும் 
பொருள் நிறைந்த பாடல் என்றால், 
பொதிந்த அழகு மிக்க உண்டு. 
 உயிரா மானமா என்ற கேள்வி, 
உயிருள்ள வரைக்கும் தானே? 
வாடும் மலருக்கு ,வாசம், வாடா மலருக்கு ஏது? 
தேடும் பொருளுக்கு,விலை யுண்டு; 
யாரும் நாடாப் பொருளுக்கு மதிப்பேது? 

உனக்குப் பிடித்தது உணவாகும், 
எனக்கோ அதுவே விஷமாகும்!
பயணிக்கு,பயணம் கடினம், 
ஓய்ந்தவனுக்கோ ஓய்வும் கடினம்; 
நேசம் இருந்தால் சுமையும் சுகமே, 
பாசம் மறந்தால்,நினைவும் சுமையே! 
குனிந்தவன் எழுதிய குப்பையும் இலக்கியமாகும்
குனியாதான் எழுத்து குப்பைக்குப் போகும்! 

எழுதவந்தது எதையோ,
எழுதுகிறேன் எதைஎதையோ
எழுகின்ற எண்ணங்கள் என்னென்னவோ. 
சொல்ல வந்ததை, சொல்ல வில்லை நானே; 
சொல்லாமலே உனக்கு, விளங்கும் தானே!

Tuesday, May 5, 2009

கொசுவை விரட்ட!

                      நான் கடைகளில் விற்கும் பலவகை கொசு விரட்டிகளைப்பயன் படுத்தி எதுவும் முழுப் பாதுகாப்பு அளிப்பதில்லை என்று கண்டுகொண்டேன். காயில்கள்,மேட்டுகள்,ஜெல்கள்,திரவங்கள்,உடலில் பூசிக்கொள்ளும் கிரீம்கள் என பலவற்றையும் தனித்தனியாகவும் ,ஒன்றுக்கு மேற்பட்டு கூட்டாகவும் பயன் படுத்தி வீரத்தில் சிறந்தது கொசுவா,மனிதனா என்று பட்டிமன்றம் போடும் அளவுக்கு அனுபவம்(!) வந்துவிட்டது. 

எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் கீழ்க்கண்ட குறிப்பு (ஆங்கிலத்தில்) சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணில் பட்டது. சினிமாவில் சொல்வதுபோல், (எதெல்லாமோ பண்ணியிருக்கோம்,இதைப் பண்ண மாட்டோமா?) இதையும் நான் முயற்சித்துப் பார்த்தேன்.இதுவும் 100% உத்திரவாதம் இல்லை. ஆனால் இது நம் உடம்புக்கு கெடுதி விளைவிக்காது.

                                        இதை, இருட்டுவதற்கு முன்/கொசுக்கள் படையெடுப்பற்கு முன் பயன்படுதி கொசுக்களை விரட்டிவிட்டு சன்னல்களை மூடிவிடவேண்டும். புகை போடுதல் (Fumigation) பூச்சிகளுக்கு எதிரான ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும்.பெரும்பாலும் ரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படும். ரசாயனப்புகை ஒரு விரட்டி (repellent) யாக செயல் படுகிறது. என்ன, அந்த புகையை நாம் தாங்கிக்கொள்ள வேண்டும்! 

உபயோகப்படுத்திப் பார்த்துவிட்டு கொசுவைவிட புகை பரவாயில்லையா என்று எனக்கு சொல்லுங்கள். இதற்குத்தேவையான பொருட்களை மிகவும் சுலபமாக சேகரிக்கலாம். தேவைப்படும் பொருள்கள்: 1. வேப்பம் இலைத்தூள் – 1 பங்கு 2. நெல் தவிடு – ½ பங்கு 3. மஞ்சள் சிறு சிறு துண்டுகள் - ½ பங்கு 4. கடுகு – 1/10 பங்கு 5. சாம்பிராணித்தூள் – 1/10 பங்கு இதில் வேப்பம் இலைகளைக் காயவைத்து அரைப்பதுதான் கொஞ்சம் சிரமமான வேலை. மேற்கண்ட பொருட்களை நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.இக் கலவையில் சிறிதளவு எடுத்து நிலக்கரி தணலில் போட்டால், வரும் புகை கொசுவை விரட்டப்போதுமானது. எங்கள் வீட்டில் உள்ள வேப்பமரத்தில் இருந்து கிளைகளை வெட்டி மொட்டை மாடியில் காயவைத்து இலைகளை (காற்றில் பறந்தது போக மீதி) சேகரித்தேன்,மற்ற சாமான்களை கடையில் வாங்கினேன்.வேப்பம் இலைகளயும் மஞசள் துண்டுகளையும் எங்கள்வீட்டு பழைய மிக்சியில் போட்டு அரைத்ததில் ஜார் மற்றும் மோட்டார் இரண்டும் சரி செய்யமுடியாத அளவுக்கு கெட்டுப்போயின. என் மனைவியிடம் பாட்டு வாங்கிகொண்டேன். புது மிக்சி வாங்கி அவளை சமாதானப்படுத்தினேன்(வேறு வழி?).

கவுண்டமணி சொல்வதுபோல் ‘வாழ்க்ழ்கையில் இதெல்லாம் சகஜமப்பா”. 
சரி பாயின்டுக்கு வருவோம். எங்கள் வீட்டில் அம்மி,கல் உரல்,மர உரல் பொன்ற எந்த சாதனங்களும் இல்லாததால் நான் இந்த பொருட்களை அரைக்காமலே பயன் படுத்தினேன்.ஓரளவு பயன் கிடைத்தது. புகை போடுவது ஒரு நுண்கலை(high tech) என்று சொல்லி என் மனைவி அந்த வேலையை என் தலையில் கட்டிவிட்டாள். தவிரவும் நான் கல்லூரியில் விவசாயம் படிக்கும்போது பலவேறு பாடங்கள் படித்ததில் பூச்சி இயல் ((entomology) படித்த விஷயம் அவளுக்கு நினைவிருந்தது.(எனக்கு மறந்து விட்டது!) 
எங்கள் வீட்டில் பழைய குக்கர் ( அது நன்றாகத்தான் இருந்தது; புது குக்கர் வாங்கத் திட்டமிட்டு என் மனைவி அதை பழைய குக்கர் ஆக்கிவிட்டாள்!) 

அதை எடுத்து விறகுக்கரி போட்டு தணல் உண்டாக்கி மேற்கண்ட பொருட்களை (அரைக்காமலே) மேலே பரப்பி புகை உண்டாக்கினேன். (நிலக்கரியோ,பழுப்பு நிலக்கரியோ (leco) என்றால் சரியாக இருந்திருக்கும். சாயந்திரம் தினமும் இது என் வேலையானது.சன்னல்களைத்திறப்பதும், பின் புகை போடுவதும், சிறிது நேரம் கழித்து சன்னகளை மூடுவதும், இப்படி வீட்டில் உள்ள எல்லா அறைகளையும் சுற்றி வந்தால் ‘விடிந்து விடும்’. 

ஒரு கையில் குக்கரைப்பிடித்துக்கொண்டு மறுகையால் கைவிசிறி கொண்டு விசிறினால் புகை அபரிமிதமாக வரும். கண் லேசாக எரியும்.கண் கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். அத்துடன் அரைக்காமல் போட்டதால், பாதி எரிந்த மற்றும் எரிந்துகொண்டிருக்கும் வேப்பம் இலைகள் குக்கரைவிட்டு விடுதலை பெற்று படுக்கை சோஃபா மேலெல்லாம் அடைக்கலம் அடைவது வழக்கம். இதைக்கண்ட என் மனைவி, ஒரு வாரம் பொறுத்துப்பார்த்துவிட்டு நீங்கள் புகை போட்டது போதும் என்று நிறுத்திவிட்டாள்.நான் மனசுக்குள் மத்தாப்புடன் “ நீ சொல்கிறாயே என்று விட்டு விட்டேன்; இது எனக்கொன்றும் சிரமமில்லை’, என்று பந்தா காட்டினேன். அவள் “உங்களுக்கென்ன சிரமம்? நீங்கள் புகை போட்டபின் வீட்டை பெருக்கினால்தான் சரிப்பட்டு வரும். விளக்கு வைத்தபின் பெருக்கக் கூடாது என்று என் பாட்டி சொல்லி இருக்கிறாள்” என்றாள். எனக்கு எந்த தாத்தாவும் விளக்கு வைக்கும் நேரத்தில் புகை போடக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் மனைவி பேச்சை அனுசரித்து (சொல்படி கேட்டு என்று பொருள் கொள்க!) நடந்து கொள்ளும்படி சொல்லி இருந்தார்.இப்படியாக எனது ஆராய்ச்சி நடுவிலேயே நின்று போய்விட்டது. 

 இன்னொரு விஷயம் விட்டுப்போய்விட்டது எங்கள் வீட்டுக்கு மாலையில் காப்பி நேரத்துக்கு வந்து “இந்தப்பக்கம் வந்தேன்,சும்மா உங்களைப்பார்த்துவிட்டுப்போகலாம்”, என்று வழிந்துவிட்டு என் மனைவி கையில் காப்பி வாங்கி குடித்து ‘ருசி கண்ட’ ஒருவர் இந்த புகை போட ஆரம்பித்ததும் தன் வருகையை நிறுத்தி விட்டார். அவர் என் மனைவிக்குத் தூரத்து உறவு. காரணம் புரியாத என் மனைவி அவரைப் பார்த்தால் வீட்டுக்கு அழைக்கும்படி சொல்லி இருக்கிறாள்.அவருக்கு டிக்ரி காப்பி கொடுக்கும் என் மனைவி எனக்கு டிப்ளமா காப்பி தான் கொடுப்பாள். “வர்றவங்க நம்மைப்பத்தி என்ன நினைப்பாங்க. நாம் எப்படியாவதுஅட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.” என்று நீர் மோர் போல நீர் காப்பி தருவாள். இப்போதெல்லாம் எனக்கு ஓரளவு சுமாரான காப்பி கிடைக்கிறது. இது புகை போட்டதனால் வந்த பலன். சமீபத்தில் இன்னொரு நண்பர் வேப்பம் இலைகளையும்,வேப்பம் பட்டைகளையும் (காயவைத்தது) கலந்து தணலில் போட்டு படுக்கை அறையில் வைத்துவிட்டால் அது கொசுவிரட்டி காயில் போல பலன் கொடுக்கும் என்றார். அதை இன்னும் முயற்சிக்கவில்லை.பழைய குக்கரை பாத்திரக்கடையில் போட்டு வேறு ஏதோ பாத்திரம் வாங்கிவிட்டாள் என் மனைவி. புது குக்கர் பழசாகட்டும் என்று காத்திருக்கிறேன்! இதைப்படித்துவிட்டு நீங்கள் யாராவது முறைப்படி கலவை தயார் செய்து புகை போட்டு விளையும் பலன் களை எனக்குத்தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன்.எனக்காக நீங்கள் இது கூட செய்ய மாட்டீர்களா என்ன?. 

 வேப்ப மரம் பார்த்திராதவர்களுக்காக எங்கள் வீட்டு வேப்பமரம் படம் மேலே .

Saturday, March 21, 2009

எதற்குப் பொங்கல்

முந்தைய பதிவில் என் நண்பர் எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்துக் கடிதத்துக்கு நான் எழுதிய பதில். கவிதையா, கட்டுரையா இல்லை வெற்றுரையா என்று comments ல் சொல்லவும்.

 மதுரை 09/03/1993

அன்புள்ள லக்‌ஷ்மி காந்தன், 
உன் கடிதம் வந்தது;
 இல்லாத மகிழ்ச்சிக்கு சொல்லாத வாழ்த்தாக! 
ஏது பொங்கல்,எதற்குப் பொங்கல் 
என்ற கேள்வி நல்ல கேள்வி. 
ஓசையின்றி கேட்டதினால்- 
விழவில்லை காதில் பலருக்கு;

வெள்ளையர்கள் ஆட்சி தப்பாட்டம்-
அதை எதிர்த்து விடுதலைப் போராட்டம்! 
அன்றைய எழுச்சி,வீரம், தியாகம்! 
எங்கே போனது,எங்கே போனது? 
 அடிமைப்பட்டால் புத்தி வருமெனில்,
 அடிபட்டால்தான் வேகம் வருமெனில்,
இன்னும் சிலநாள் இருப்போம் இப்படி.
அடிமைப்பட்டு,அடியும் பட்டு. 
மக்கள் உழைக்க மறுக்கின்றார், 
மானம் விற்றுப் பிழைக்கின்றார்.

தம் மொழியை மறந்த மக்கள்-
சுலப வழிதேடி அலைகின்றார். 
ஒற்றுமை இல்லா இக்கூட்டம்,
ஓரணியில் திரண்டால் நலமாகும்;
புதிய தலைமை வந்தாலே 
புதிய எண்ணங்கள் உருவாகும். 
ஓட்டுக்கு அலையும் தலைவர்கள் ஒழிந்தால் 
நாடு உருப்படுமே! 
தன்னலமின்றி உழைத் தாலே தலைமை மிகவும் பலப்படுமே. 

ஆண்டவர் அனைவரும் நல்லவரே, 
ஆள்பவர் எல்லாம் கெட்டவரே! 
அதிகாரம் ஆளைக் கெடுக்கிறது 
ஆங்கிலப் பழமொழி சொல்கிறது.
மாறும் காலம், மாறும் போது மாறவேண்டும் 
மனிதர்களும். தலைமையும் விலக்கல்ல; 
மாறாத எதுவும் மறைந்தே அழியும். 
மாறும் உலகில், மாறா திருப்பது மாற்றமே.
நிலையாமை ஒன்றே நிலையாய் இருப்பது. 
தருணம் இதுவே தலைமையை மாற்ற- 
இளைஞர் பலபேர் இருக்கின்றார்; 
சொன்னால் சுமையை ஏற்கின்றார்! 
நான் கவிஞனும் அல்ல - 
இது நல்ல கவிதையும் அல்ல! 

வீட்டில் எல்லாம் நலம்தானே, 
நாங்கள் அனைவரும் அப்படியே! 
நாட்டை மறந்து சில நாட்கள் 
வீட்டை நினைத்துப் பார்ப்போமா! 
அன்புடன் ராஜசுப்ரமணியன்.

Friday, March 20, 2009

கவிஞனின் கோபம்

கீழே உள்ள கவிதை என்னுடைய நண்பர் திரு. லக்‌ஷ்மி காந்தன் எனக்கு 1993-ம் ஆண்டு பொங்கல் வாழ்த்தாக அனுப்பியது. அவர் நண்பர்கள் அவரை நெருப்புக்கவிஞர் என்று பாராட்டுவார்கள் இக்கவிதையை அவர் அச்சடித்து பொங்கல் வாழ்த்தாக அனுப்பினார். அவர் சென்னையில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியொன்றில் முதுகலை உதவியாளராக பாடம் நடத்தி வந்தார். அவர் என்னுடைய பால்ய நண்பர். நாங்கள் இருவரும் நெய்வேலியில் இருந்தபோது பள்ளியில் வகுப்புத்தோழர்கள்.பின் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நான் விவசாயம் படித்தபோது அவர் விலங்கியல் படித்தார். பின் சென்னைக்கு வந்து முதுகலை மற்றும் M.Ed முடித்து ஆசிரியப்பணியில் சேர்ந்தார். நான் சென்னையில் பணி புரிந்தபோது அடிக்கடி சந்தித்து அளவளாவி வந்தோம். விருந்தோம்பலில் அவரையும் அவர் மனைவியையும் மிஞ்சுவதுகடினம். என் திருமணத்திற்கு முன் ஒரு தீபாவளி யன்று அவர் அழைப்பிற்கிணங்கி நாள் முழுவதும் அவர் வீட்டில் ஒருவராகத்தங்கி பண்டிகை கொண்டாடியதையும் என் திருமணத்திற்கு அவர் மாப்பிள்ளை தோழனாக கூட இருந்து நல்கிய உழைப்பையும்,ஒத்துழைப்பையும் மறக்க இயலாது. என் பணி காரணமாக நான் பல ஊர்களுக்கு மாற்றலாகிச்சென்று மதுரையில் இருந்தபோது இந்த வாழ்த்து வந்தது. இக்கடிதம் வந்து சில மாதங்களில் அவர் உடல் நலமின்றி இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். அச்செய்தி எனக்குத்தாமதமாகத்தான் தெரிந்தது. அச்சமயம் நான் vertigo என்னும் நோய் காரணமாக மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்துவிட்டு பணிக்கு திரும்பியிருந்தேன் எனவே அவருடைய நண்பர்கள் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நினைவஞ்சலியில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. எனக்கு வரும் கடிதங்களில் முக்கியமானவற்றை பாதுகாத்துவைக்கும் பழக்கம் உண்டு. இந்த வாழ்த்துக்கடிதமும் அதற்கு நான் கவிதை வடிவில் அனுப்பிய பதில் கடிதமும் என்னுடைய பழங்கணக்கை தணிக்கை செய்தபோது கிடைத்தன. இக்கவிதையை என் மறைந்த நண்பர் கவிஞர் காந்தன் அவர்கள் நினைவாக இந்த வலையில் பதிக்கிறேன். அவர் தீவிர திமுக உறுப்பினர். இந்த வாழ்த்து வந்தபோது திமுக ஆட்சியில் இல்லை. அப்போதைய அதிமுக ஆட்சியின்மேல் அவருக்கிருந்த கோபத்தை இக்கவிதை காட்டுகிறது.

ஏது பொங்கல் ?
மதுப்பொங்கல் தமிழகத்தின் தெருக்கள் தோறும்
மதப்பொங்கல் வட நாட்டில் வீடுதோறும்-இதில்
எது பொங்கல், ஏது பொங்கல் தமிழனுக்கு ?
எங்கே பார்த்தாலும் வறுமை, வன்முறை.
உதய சூரியனின் ஆட்சியில்லா இந்த நாட்டில்
ஒருநாளும் நமக்கினிமேல் பொங்கலில்லை.
இதய தெய்வம் கலைஞரின் ஆட்சி வரும்
இனிய நாளே நமக்கெல்லாம் பொங்கலென்பேன்.

ஒத்தை ரூபாய் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டு-தமிழகத்தை
ஒரேயடியாய் விலைபேசி விற்கின்றார்-தமிழனோ
சொத்தைபோல் வாழ்ந்துகொண்டு சோற்றுத்துருத்தி
தொன்னைகளாய் அலைகின்றான்- இவனுக்கு
இத்தரையில் பொங்கலெல்லாம் ஏன்,எதற்கு?
எருமைகள்போல் உணர்ச்சியின்றி திரிகின்ற
மட்டித் தமிழர்கட்கு மானம் வரும் வரையில்
மறந்திடுவோம் பொங்கல்வைக்க கொஞ்ச நாட்கள்.

ஆரியம்தான் இந்த நாட்டை ஆட்சி செய்யும்;
அடிமைகளாய் தமிழனெல்லாம் கால்வீழ்ந்து,
வீரியமில்லா, விலங்குகளாய் வாழ்வோமெனில்,
வீணாக நமக்கெதற்குப் பொங்கல் நாள் ?
எரிமலையாய் தமிழன் இந்த நாட்டில்
என்றைக்கு எழுகிறானோ-அன்றுதான்
உரிமையுடன் பொங்கல் வைப்போம்-அதற்கு
ஒப்பரிய கலைஞர் பின் அணிவகுப்போம்.
- கவிஞர் காந்தன், M.A.,B.S.c.,M.Ed.
செயலாளார்
சேப்பாக்கம் தி.மு.க இலக்கிய அணி
சிந்தாதிரிப்பேட்டை,சென்னை - 600 002.
இதற்கு நான் அனுப்பிய பதில் அடுத்த பதிவில்.

Wednesday, February 25, 2009

காலம்.

காலமோ தொடர்ந்து செல்லும், 
கதை பல தொடர்ந்து சொல்லும், 
ஓய்வின்றி ஓடும்,நடக்கும்- 
நிற்பது போலத்தோன்றும்,
நில்லாதோடும்; 
 துளி நொடிப்பொழுதில் அசையும்- 
காலம் அனைத்தையும் ஆட்டி வைக்கும்.
 இளமையில்,இன்பத்தில் பறக்கும் காலம்; 
முதுமையில், துன்பத்தில் ஊர்ந்து போகும். 
அளவில்லா காலம்,நேரம்- நாட்களாய்,மாதமாய்,
வருடமாய், பல்லாயிரம் ஆண்டாய்; 
முடிவில்லா இந்த வட்டம்,முடிவது போலத்தோன்றும்.
 நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம்- என்றெல்லாம் உண்டா என்ன? இறவாத காலம்; பின்னெது இறந்த காலம்? 
நிலைப்படியில் இடித்துக்கொண்டு, 
நிலைப்படி இடித்ததென்று,சொல்லும் உலகம்.
கைநழுவிப் போனதென்று சொல்லக்கூச்சம்-
நாம் மறந்துவிட்ட காலமே இறந்த காலம். 
எது நல்ல நேரமென்று என்னைக்கேட்டால்
இதுவென்று சொல்லுமுன்னே கடந்து போகும்.
இன்னாளில் ஓட்டம் வேகம் பின்னாளில் பயனாகும் ; 
முயற்சி இல்லையென்றால், முயலும் தோற்கும். 
அளப்பரிய காலம் ஆனால் நாம் இருப்பதோ கொஞ்ச காலம்.
காலத்தைக் கடன், வாங்க- கொடுக்க சேமிக்க- இயலாது; 
ஆனாலும்,
இருக்கின்ற காலத்தில் நற்செயல்கள் செய்திட்டால்
காலத்தை வென்று நிற்போம்!

Friday, February 13, 2009

கலைந்த கனவுகள்.

(1973-ம் ஆண்டு பிற்பகுதியில் நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு பதிலாக அனுப்பியது. அவர் தன்னுடன் படித்த பெண்ணைக் காதலிப்பதாக நினைத்தார். அவளை மணக்க விரும்பி என் கருத்தையும் கேட்டார். நான் அவருக்கு அனுப்பிய பதில் இது. கவிதையா இல்லையா என்று படிப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.) 

ஆருயிர் நண்பனுக்கு, 

அறிந்தது போல் இருந்தாலும் அறியாப்பருவம். 
பாலியல் அறிந்துகொள்ளத் துடிக்கும் பருவம். 
அனுபவம் எனக்குண்டென்று கேட்கிறாயோ?
நான் சூடு கண்ட பூனையென்று அறிவாய் தானே? 
தண்ணிலவை மேகங்கள் மறைக்கப்பார்க்கும் 
நட்புணர்வை மோகங்கள் கொச்சையாக்கும்; 
ஆனாலும் இவையெல்லாம் மறைந்து போகும் 
அறிவென்னும் ஒளி வந்தால் தெளிவுண்டாகும். 
செம்மண்ணில் பெய்கின்ற மழையின் ஈரம் 
செந்நிறத்தைப் பெறுவதுவோ தெரிந்த சேதி;
நன் மனத்தில் பிறக்கின்ற அன்பு தாகம்
நன்செய்யில் பயிர்போல நன்றாய் வளரும். 
 உள்ளத்தில் உறுதி மட்டும் இருந்துவிட்டால் 
உலகெல்லாம் காலுக்கு கீழே காணும். 
துடிக்கின்ற இதயத்தில் உண்மை அன்பு,
அது அழிகின்ற உலகத்தில் அழியாப் பண்பு. 
துள்ளும் இளமையெல்லாம் சிலநாள் பொழுது.
நெஞ்சை அள்ளும் அழகெல்லாம் தேயும்பொழுது. 
ஈன்றவர்க்கு பெற்றகடன் தீர்க்கும் முன்னே-
வேறு பெண்ணைத் தேடுவது சரியா நண்பா ? 
ஓடுகின்ற ஆறெல்லாம் கடலைச்சேரும் – பெண்ணை 
நாடுகின்ற ஆசையெல்லாம் உடலைச்சாரும்.
காதல் பாடுகின்ற பெண்ணுக்கு காட்டும் பரிவில்- பாதியேனும்,
பாடு படுகின்ற பெற்றோர்க்கு உண்டா,இலையா? 
கடல் தோன்றிப்பாய்கின்ற நதியும் உண்டு- 
அது கண் தோன்றிப்பாய்கின்ற கண்ணீர் வெள்ளம். 
கடலவு கண்களிலே வீழ்ந்தபின்னே கரைசேர ஏதுவழி? எண்ணிப்பார்ப்பாய். காதலுக்கு எதிரி நான் இல்லை,காதலிக்கு மட்டும் தான்! 
என் காதல் தோற்றதனால் எனக்குப்பாடம்.
நீ பாடம் கற்பதற்கு நல்ல வாய்ப்பு.
பெண்பாவம் எனக்கெதற்கு? 
மேலும் நீ கற்க என் வாழ்த்துக்கள்!