Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, March 2, 2025

ஆயுரமாயிரம்!

 

எழுதியவர் : என் தங்கை கோசரஸ்வதிகடலூர்.

அரும்புகள் ஆயிரமாம்,

அரும்புகள் செய்யும்

குறும்புகள் ஆயிரமாம்.

குழந்தைகள் ஆயிரமாம்,

குழந்தைகள் போடும்

கும்மாளம் ஆயிரமாம்.

 

கண்கள் ஆயிரமாம்,

கண்கள் காணும்

காட்சிகள் ஆயிரமாம்.

பெண்கள் ஆயிரமாம்,

பெண்கள் பாடும்,

பாட்டுகள் ஆயிரமாம்.

 

ஆண்கள் ஆயிரமாம்,

ஆண்கள் ஆடும்

ஆட்டங்கள் ஆயிரமாம்.

மனிதர்கள் ஆயிரமாம்,

மனிதர்கள் காட்டும்

வண்ணங்கள் ஆயிரமாம்!

 


Wednesday, April 10, 2019

கவிதையை ரசிக்கிறேன்!


கவிதையை ரசிக்கிறேன்,
கவிஞனை வியக்கிறேன்;
குளிர் அறையில் குடியிருப்பான்,
வறுமையை எதிர்த்து போராடுவான்.
பல கோடி சொத்து, சொகுசு வாழ்வு;
வறியோர்க்கு கண்ணீர் வடிப்பான்.
கள்ளுண்னாமை போற்றுவான்;
பொழுது சாய்ந்தால், போதை தேடுவான்!

நியாயம், நீதி, நேர்மை, அவன் பாட்டிலும், ஏட்டிலும்
அதிகாரத்தில் சலுகை,பேச்சிலே பொய், நல்லவன் போல நடிப்பு
பெண்ணின் பெருமை பேசுவான், மயங்கும் பெண்ணைத் தடவுவான்.
ஆளுவோரை போற்றுவான், அரசியல் எதிரியை தூற்றுவான்

தமிழ் மொழி அவனுக்கு கவசம், கவிதை அவனது ஆயுதம்;
அதனால், கவிதையை ரசிக்கிறேன், கவிஞனை வெறுக்கிறேன்!

Saturday, September 20, 2014

அவள் யாரோ, நான் யாரோ ...

அவள் யாரோ, நான் யாரோ 

காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும்
என் பாதையில் அவளும்
அவள் பாதையும் நானும்
நான் போகையில் அவள் வருகிறாள் ,…
எதிரும் புதிருமாய் .
அவள் ஸ்கூட்டியில் ,
நான் ஸ்கூட்டரில் .
அவள் இருபது களில் ,
நான் முப்பது களில் .
பார்வைகள் தவிர்க்க முடியாதவை ;
வார்த்தைகள் வாய் வரை வந்து நிற்கும் .
சொல்லத் தவிக்கும் மனம் , சொல்லவோ தயக்கம் .
சைகை காட்டினால் தவறாகப் படுமோ ?
இந்த வயசில் போகுதே புத்தி என்பாரோ யாரும்;
எனக்கு அறுபது , அவளுக்கு இருபது.
இருந்தாலும் இருந்தாலும்
துணிந்து விட்டேன் .
இன்று சொல்லிவிட வேன்டியது தான் ;

சொல்லியே விட்டேன்,
"
மிஸ் ,உங்க வண்டி முன் விளக்கு எரிஞ்சி கிட்டே இருக்கு" !

 




Tuesday, July 17, 2012

ராகவன் S

கல்லூரித் தோழர் ராகவன் .


எங்கிருந்தோ வந்தான்,என் மனதில் இடம் பிடித்தான்
பக்கத்து இருக்கை,பக்கத்துப் படுக்கை
உணர்வுகள் ஒன்று போல, உள்ளமும் அப்படியே
என் மனத்தின் பிரதியோ இவன்?

என்னைப்போல் எண்ண ஓட்டம்
என்னைபோல் பார்வை, நோக்கம்,
இதமான அன்பு,இனிமையான பேச்சு
இது எல்லாமே அவனோடு போச்சு.

பேச்சு, பேச்சுதான் இரவு முடியும் வரை.
சுற்றுப்புறம்,உறவுகள், உறவினர்,உற்றவர்
பெற்றவர், மங்கையர், மற்றெல்லாம்
எங்கள் பேச்சுக்குப் பொருளாகும்.

எப்போதும் பேச்சு,என்னாதான் பேசுவீர்கள்
என்று கேட்பார்கள் என் வீட்டில்,அவன் வீட்டில்.
சொல்வதற்கு ஒன்றுமில்லை மற்றவர்க்கு-ஆனால்
பேச்சு முடிவதில்லை,பின்னிரவு வெகு நேரம்.

மனக் குறைகள் எனக்கிருக்கும்  எத்தனையோ
மறப்பேன் அத்தனையும் இவன் இருந்தால்..
இறவாப் புகழ் என்றால் பொருள் அறியேன்
மறவா நிகழ்ச்சி எத்தனையோ, நான் மறவேன்.

மேகம் இல்லா வானம் போல
ராகம் இல்லா பாட்டைப் போல
சுவையே யில்லா உணவைப் போல
என் நண்பன் இல்லா இவ்வாழ்க்கை

கனவு கலைத்த உறக்கம் போல்
துடுப்பே இல்லா கலத்தைப் போல்
வாலே இல்லா பட்டம் போல்
உயிர்ப்பே இல்லா என் வாழ்க்கை.

காலங்கள் கடந்தபின்னும் கலையாத உன் நினைவு
இதயத்தில் கோலங்கள், அழியுமோ எந்த நாளும்?
உறக்கம் இல்லா இரவுகள்,உறங்கினால் உன் கனவு
உன்னையே நினைத்து என் இரவு நீளும்,நீளும்.

Sunday, July 24, 2011

தேவதை – கவிதை

இது தேவதை என்ற இதழுக்கு ஜூன் மாதம் (2011) போட்டிக்ககு அனுப்பி பரிசு பெறாத,பிரசுரம் ஆகாத கவிதை! கொஞ்சம் திருத்தி இருக்கிறேன்.
முன்பு இதைவிட கேவலமாக இருந்தது!

தேவதையே, என் தேவதையே, 

எட்டும் உயரத்தில் என் தேவதையே

.தாயாய், தமக்கையாய்,

தங்கையாய்,சேயாய் காதலியாய், எல்லாமாய்..

புன்சிரிப்பாலெனை மயக்குகிறாய், 

மனப் புண்ணுக்கு நீ மருந்தானாய்

சிரிக்கும்போது தேவதைதான், 

சிடு சிடுத்தால் வேதனைதான்

மனத்தில்பூவாய் உலவுகிறாய், 

இதயத்திலின்பம் தூவுகிறாய்

கனியாய் இனிப்பாய், காயாய் கசப்பாய், 

காரணம் சொல்வாயா?

அன்பாய் இருந்தால், மனைவியும் ஒரு தேவதையே, அன்றேல்

வன்சொல் ஆடும், மாற்றுருவில் வந்த ராட்சசியே!

Thursday, April 7, 2011

தமிழக வாக்காளரே!

1.தமிழக வாக்காளருக்கு,சில கேள்விகள் : 

 தன் முயற்சி இல்லாமல் தவிப்பது உன் நிலையோ, 
உன் திறமை உணராமல் உழல்வது உன் விதியோ? 
மீன் குஞ்சு நீ, நீந்துவது என்ன கஷ்டம்.? 
நீரிலும் நடப்பேன் என்றால் அதுவுன் இஷ்டம்!
 மற்றவர் முந்திப் போக , எப்போதும் புறமே கூறு: 
கரையிலே நின்றிருந்தால், கற்பது நீ எவ்வாறு? 
கற்பதுன் கடன் என்று உணரவில்லை, 
 நல்லதும் கெட்டதும் அறிவாய் இல்லை. 
 நான் எழுந்து நின்று இரு கைகள் நீட்டினாலும் 
உன் தலை நிமிர்ந்து நீ, நோக்க மாட்டாய். 
ஈரடி நானெடுத்து வைத்தாலும்,
உன் காலால் ஓரடியும் முன்னாலே வைக்க மாட்டாய். 
உழைக்காமல் உண்பதற்குக் கற்றுக் கொண்டாய்
இரவாமல் பிழைக்கும் வழி, என்ன யோசி. 
அடுத்தவர் கால் பிடித்து வாழும் போது 
அடிமை நீ அல்லாமல் வேறு என்ன? 
 கல்வியே வாழ்க்கை இல்லை, ஆனால்
 வாழ்க்கையில் கல்வி உண்டு. 
தேன் என்று சொன்னாலே நக்கும் கூட்டம் 
இலவச வலைக்குள்ளே வந்து மாட்டும்! 
கற்றவன் தப்பு செய்வான், தப்பி விடுவான் 
மற்றவன் என்ன செய்வான்,மாட்டிக் கொள்வான்! 
தவறே செய்தாலும், சரியாகச் செய்யவேண்டும்,
அன்றேல் செய்தது சரியென்று நிறுவ வேண்டும்! 
 இயலுமென அறியாமல் இருக்கின்றாய்,இருக்கின்றாயா? 
பட்டும் என்ன பயன், பாடம் கற்றாயா? 
ஆண்டுவிட்ட கட்சி பல , ஒருபயனும் இல்லை, 
 ஆண்டுபல ஆயிடினும், நீ கற்றாய் இல்லை! 
 உன்னை அறியாமல், நீ செய்யும் தவறெல்லாம் 
என்னை அறியாமல், நானும் செய்கின்றேன் 
அனைவரும் போகும் பாதை ஆட்டின் பாதை 
ஆராய்ந்து பார்த்தால் நீயறிவாய் புதிய பாதை! 

2 தமிழக வாக்காளரின் பதில் : 

மந்தைக்குள் மறி ஆடு,நானோர் ஆடு! 
எந்தனுக்குன் உபதேசம் வேண்டாம் அண்ணே. 
தந்தைக்கு உபதேசம் தந்து விட்ட கந்தனுக்கு
 உடன்பிறவா தம்பியா நீ? 
பொங்கலைப்போல், தீவளி போல் 
தேர்தலும் ஒன்று, 
செலவில்லாப் பண்டிகை,வரும்படி உண்டு! 
கட்சி, கொள்கை, நேர்மையெல்லாம் நமக்கெதுக்கு;
 காசு கொடுத்தவனுக்கு போடு ஓட்டை, வம்பெதுக்கு! .

Thursday, July 2, 2009

1973 ல் எழுதிய கவிதைகள் 3

                              நான் என்னுடைய நண்பர் ஒருவருக்கு எழுதிய கவிதை வடிவிலான கடிதத்தில் மற்றொரு நண்பர் திரு ஷண்முகத்தை நலன் விசாரித்திருந்தேன். அதைப்படித்துவிட்டு அவர் அது என்னுடைய கவிதையா அல்லது வேறு கவிஞர் எழுதியதை நான் எடுத்தாண்டேனா என்று ஐயம் எழுப்பியிருந்தார். 

                              அதற்குப்பதிலாக நான் எழுதியது. Dear boss, I may have a few weaknesses, but plagiarism is not one of them. Just to prove my point I write some nonsense which no one else will claim as his own. 

 அன்பு ஷண்முகமே,ஆசைத் திருமுகமே,
 முறையாகத் தமிழைநான் படிக்கவில்லை, 
முழுதாக எதையும் நான் கற்கவில்லை.
 குறைகாண இயலாத குணக் குன்றில்லை
 நான் எழுதும் கவிதை,காவிய மில்லை. 
 என் பாடல் தவறென்றால், பொறுத்திருப்பேன், 
என் தகுதி குறைவென்றால்,சிரித்திருப்பேன். 
இன்னொருவன் என் பாடல் தனது என்றால்
எப்படியும் மறுத்துரைப்பேன். 
உமக்காக ஒரு கடிதம், கவிதை(?) வடிவில்.

   காதல், காதல் 

யானையைத் தடவிப் பார்த்து, 
யானையைப் பற்றிச் சொன்ன 
நண்பர்கள் கதையைப் போல- 
பொதுவாய்க் காதலைப் பற்றிச் 
சொல்லும் யார்க்கும், 
பார்வைக் கோணத்தில் மாற்றம்;
எனவே , ஒரு காதல் போல 
இன்னொன்று இல்லை; 
காதலன் வேறு,வேறு; 
காதலி வேறு,வேறு 
தூயவர் துய்க்கும் காதல்வேறு!

காதலென் றறியாது காதலில் வீழ்வோர், 
காதலில் மூழ்கிக்கொண்டு நட்பென்போர். 
உடல் தொடாக் காதலாக, 
உள்ளத்தில் பதிவார், சிலர். 
உணர்ச்சிக்கு வடிகாலாக, 
உடம்பால் இணைவார் பலர். 
என் காதல் வான் அளவு உயர்ந்த காதல் 
ஊனிலே உறைந்த காதல். 
நான் கொண்ட காதல் பற்றி 
சொல்ல இது நேரம் அல்ல;
இருந்தாலும், சில வரிகள்.

பள்ளிப் பருவத்தில் பெண்ணொரு புதிர், 
கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் வெளிச்சம். 
தெரிந்து கொள்ளும் ஆர்வமன்றி வேறல்ல. 
ஏதேதோ எண்ணங்கள், ஏக்கங்கள், 
எதிர்பார்ப்புக்கள், எஞ்ஞான்றும் உறுத்தல்கள், 
இறுதியில் ஏமாற்றங்கள்.

ப்ளாடோனிக் லவ் என்று போனதினால்,
இன்று ஃபிரண்டுகள் மட்டும் மிச்சம் ! 
ப்ராக்டிகல் லவ் என்று போயிருந்தால், 
ப்ரேசியர் அளவேனும் தெரிந்திருக்கும்!
 முட்டி நின்று பழகவரும் பெண்மை – 
அதை எட்டி நின்று பார்த்ததுதான் மடமை; 
தொட்டுப் பார்க்கவில்லை; பார்த் திருந்தால் 
கிட்டும் சுகமெல்லம் நினைவில் நிற்கும். 

எப்படியும் இக் கவிதை
எனதென்று ஒப்புக்கொள்வீர்;அன்றேல், 
இன்னொன்று 
எழுது வேன் நான்!

Saturday, June 27, 2009

1973ல் எழுதிய கவிதைகள்-2

உறவும்,பிரிவும்.

 சமூகத்தை எதிர்க்க இயலாதவர்கள் ஏன் காதலிக்கவேண்டும்? தோல்வி உறுதி என்று தெரிந்தும் ஏன் போராடவேண்டும்? அது ஒருவகை சோகம். என் நண்பருடைய இழந்த காதலை வைத்து அவருக்கு நான் எழுதிய கவிதை. 

 முன்னர் : 

பனிக்கட்டி,பாலிலே கலந்த பழக்கூழ் – 
அவள் இதழிலே ஊறும் தேன் நீர்- 
அவள் ஆசையாய் பார்க்கும் பார்வை, 
உன் நாக்கினில் ஐஸ் கிரீம் ஆகும்.

 பறவைக்குச் சிறகு வேண்டும் 
உயிருக்கு உறவு வேண்டும். 
உறவுக்கு அவள்தான் வேண்டும்
அவளென்றால் உன்னில் பாதி! 
பக்கம் அவள் இருந்தால் வேம்பும் இனிப்பென்பாய், 
விலகி அவள் சென்றுவிட்டால்,இனிய கனி கசப்பென்பாய்!
காலம் கருதாமல் உன் தோளில் சாய்ந்திருந்தாள், 
காலம் மாறியதோ ?வசந்தத்தின் பின்னே வந்தது என்ன? 

 பின்னர்: 

செல்வம் மிக உள்ளவனைக் கண்டாள் போலும்; 
காதலும் நட்பாய் மாறி,
நீயொரு அண்ணன் ஆனாய்! 
நினத்தபின் மறப்பதும்,
மறந்த பின் மறுப்பதும் 
உண்மையை மறைப்பதும்,
பெண்டிர் கடனே! 
உன்பக்கம் இல்லை யென்றால் - 
அவள் எதிரியின் பக்கம் தானே! 
ஆதரிக்கப்படாத அன்பு எல்லாம், 
அளவற்ற வெறுப்பாய் மாறும்! 

உறவுக்காய் ஏங்குவது
 இளமைத்தாகம்-
அவள் பிரிவைத் தாங்காது
துடித்துப்போகும். 
வெறுப்பினால் பார்க்கும் பார்வை
வென்னீரை வேரில் ஊற்றும்.

 மற்றவர் கருத்து:

காதலில் தோற்றுவிட்டால், என்ன ஆகும்? 
ஆசைகள்,பாசங்கள் எல்லாம் சாகும். 
அவிழ்ந்த மனம், இலக்கின்றி எங்கோ போகும். 
அங்கும்,இங்கும் காதலைத்தேடித் தோற்கும்.  
நினைவுகளை மறக்கவேண்டும்-இல்லை
நினைவின்றி நிம்மதியாய் இறக்கவேண்டும். 
”வெந்தணலில் வேகா உடம்பு- 
உற்றவர் கண்ணீர் சொட்டிரண்டு பட்டால் வேகும்”!
என்றெல்லாம் மற்றவர்கள் சொல்லலாகும். 

என் கருத்து: 

என்னை நீ கேட்டாயென்றால், 
வாழ்க்கையில் எதுவும் 
வாழ்வைவிடப் பெரிது இல்லை. 
ஒன்றுபோய் ஒன்று வரும்;
காயத்தைக் காலம் ஆற்றும். 

வன்ணத்துப்பூச்சியின், 
வரலாறு அறிந்தவனே, 
நடந்ததை மறந்து, கூட்டை உடைத்து வா,வா. 
புதிதாய் பிறப்பாய்,பழசை மறப்பாய்,
வாழ்வில் சிறப்பாய்! 

சொல்லாத காதலுக்குத் தோல்வி இல்லை, 
பிறவாத கவிதைக்குச் சாவே இல்லை. 
மண்ணுலகில் தேறாத காதல் எல்லாம்
 வின்ணுலகில் சேராதா?
 திருமணங்கள், அங்கேதானே
 நிச்சயக்கப் படுகின்றன !

Tuesday, May 12, 2009

1973ல் எழுதிய கவிதைகள் - 1

நான் 1973-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்தில் கால் உடைந்து படுக்கையில் இருந்தபோது நேரிலும் கடிதம் மூலமும் ஆறுதல் சொன்ன நண்பர்களுக்கு நான் சில பதில் கடிதங்களை கவிதை வடிவில் எழுதினேன் .நகல் எடுத்து வைக்கவில்லை. ஆனால் முன் வரைவு (draft copy) சில நாட்களுக்கு முன் கிடைத்தது. அவற்றில் ஒன்று சில மாற்றங்களுடன் கீழே. (இது நண்பர் வடிவேலுவுக்கு எழுதியது)
இலக்கியமும்,இலக்கணமும்.

முட்டையா,கோழியா முதலெது அறிய 
முயன்ற மனிதர் தோல்வி கண்டார். 
இலக்கியம் இலக்கணம் இவற்றிலும் கூட 
முன்னது,பின்னது அறிந்தவர் இல்லை.
 இலக்கு உள்ளது இலக்கியம் – அதில் அழகு சேர்ப்பது 
இலக்கணம் என்பதென் எண்ணம்; 
எனவே இலக்கணம் மீறிய கவிதைகள் உண்டு.
 இங்கு சிலவரி எழுதிட வந்தேன் – 
இதில் இலக்கணமோ,இலக்கியமோ தேடவேண்டாம்

பெண்கள் என்றால் அழகுடன் இருப்பர்; 
அழகு அற்ற பெண்டிரும் உண்டு. 
 உடலின் அழகு,உருவெளித் தோற்றம்; 
பெண்மையின் குண நலன், பேரழகாகும்.
 இலக்கணம் இருந்தால் இனிமை உண்டு; 
இங்கே யாரும் மறுக்கவில்லை- எனினும் 
பொருள் நிறைந்த பாடல் என்றால், 
பொதிந்த அழகு மிக்க உண்டு. 
 உயிரா மானமா என்ற கேள்வி, 
உயிருள்ள வரைக்கும் தானே? 
வாடும் மலருக்கு ,வாசம், வாடா மலருக்கு ஏது? 
தேடும் பொருளுக்கு,விலை யுண்டு; 
யாரும் நாடாப் பொருளுக்கு மதிப்பேது? 

உனக்குப் பிடித்தது உணவாகும், 
எனக்கோ அதுவே விஷமாகும்!
பயணிக்கு,பயணம் கடினம், 
ஓய்ந்தவனுக்கோ ஓய்வும் கடினம்; 
நேசம் இருந்தால் சுமையும் சுகமே, 
பாசம் மறந்தால்,நினைவும் சுமையே! 
குனிந்தவன் எழுதிய குப்பையும் இலக்கியமாகும்
குனியாதான் எழுத்து குப்பைக்குப் போகும்! 

எழுதவந்தது எதையோ,
எழுதுகிறேன் எதைஎதையோ
எழுகின்ற எண்ணங்கள் என்னென்னவோ. 
சொல்ல வந்ததை, சொல்ல வில்லை நானே; 
சொல்லாமலே உனக்கு, விளங்கும் தானே!

Friday, March 20, 2009

கவிஞனின் கோபம்

கீழே உள்ள கவிதை என்னுடைய நண்பர் திரு. லக்‌ஷ்மி காந்தன் எனக்கு 1993-ம் ஆண்டு பொங்கல் வாழ்த்தாக அனுப்பியது. அவர் நண்பர்கள் அவரை நெருப்புக்கவிஞர் என்று பாராட்டுவார்கள் இக்கவிதையை அவர் அச்சடித்து பொங்கல் வாழ்த்தாக அனுப்பினார். அவர் சென்னையில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியொன்றில் முதுகலை உதவியாளராக பாடம் நடத்தி வந்தார். அவர் என்னுடைய பால்ய நண்பர். நாங்கள் இருவரும் நெய்வேலியில் இருந்தபோது பள்ளியில் வகுப்புத்தோழர்கள்.பின் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நான் விவசாயம் படித்தபோது அவர் விலங்கியல் படித்தார். பின் சென்னைக்கு வந்து முதுகலை மற்றும் M.Ed முடித்து ஆசிரியப்பணியில் சேர்ந்தார். நான் சென்னையில் பணி புரிந்தபோது அடிக்கடி சந்தித்து அளவளாவி வந்தோம். விருந்தோம்பலில் அவரையும் அவர் மனைவியையும் மிஞ்சுவதுகடினம். என் திருமணத்திற்கு முன் ஒரு தீபாவளி யன்று அவர் அழைப்பிற்கிணங்கி நாள் முழுவதும் அவர் வீட்டில் ஒருவராகத்தங்கி பண்டிகை கொண்டாடியதையும் என் திருமணத்திற்கு அவர் மாப்பிள்ளை தோழனாக கூட இருந்து நல்கிய உழைப்பையும்,ஒத்துழைப்பையும் மறக்க இயலாது. என் பணி காரணமாக நான் பல ஊர்களுக்கு மாற்றலாகிச்சென்று மதுரையில் இருந்தபோது இந்த வாழ்த்து வந்தது. இக்கடிதம் வந்து சில மாதங்களில் அவர் உடல் நலமின்றி இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். அச்செய்தி எனக்குத்தாமதமாகத்தான் தெரிந்தது. அச்சமயம் நான் vertigo என்னும் நோய் காரணமாக மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்துவிட்டு பணிக்கு திரும்பியிருந்தேன் எனவே அவருடைய நண்பர்கள் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நினைவஞ்சலியில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. எனக்கு வரும் கடிதங்களில் முக்கியமானவற்றை பாதுகாத்துவைக்கும் பழக்கம் உண்டு. இந்த வாழ்த்துக்கடிதமும் அதற்கு நான் கவிதை வடிவில் அனுப்பிய பதில் கடிதமும் என்னுடைய பழங்கணக்கை தணிக்கை செய்தபோது கிடைத்தன. இக்கவிதையை என் மறைந்த நண்பர் கவிஞர் காந்தன் அவர்கள் நினைவாக இந்த வலையில் பதிக்கிறேன். அவர் தீவிர திமுக உறுப்பினர். இந்த வாழ்த்து வந்தபோது திமுக ஆட்சியில் இல்லை. அப்போதைய அதிமுக ஆட்சியின்மேல் அவருக்கிருந்த கோபத்தை இக்கவிதை காட்டுகிறது.

ஏது பொங்கல் ?
மதுப்பொங்கல் தமிழகத்தின் தெருக்கள் தோறும்
மதப்பொங்கல் வட நாட்டில் வீடுதோறும்-இதில்
எது பொங்கல், ஏது பொங்கல் தமிழனுக்கு ?
எங்கே பார்த்தாலும் வறுமை, வன்முறை.
உதய சூரியனின் ஆட்சியில்லா இந்த நாட்டில்
ஒருநாளும் நமக்கினிமேல் பொங்கலில்லை.
இதய தெய்வம் கலைஞரின் ஆட்சி வரும்
இனிய நாளே நமக்கெல்லாம் பொங்கலென்பேன்.

ஒத்தை ரூபாய் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டு-தமிழகத்தை
ஒரேயடியாய் விலைபேசி விற்கின்றார்-தமிழனோ
சொத்தைபோல் வாழ்ந்துகொண்டு சோற்றுத்துருத்தி
தொன்னைகளாய் அலைகின்றான்- இவனுக்கு
இத்தரையில் பொங்கலெல்லாம் ஏன்,எதற்கு?
எருமைகள்போல் உணர்ச்சியின்றி திரிகின்ற
மட்டித் தமிழர்கட்கு மானம் வரும் வரையில்
மறந்திடுவோம் பொங்கல்வைக்க கொஞ்ச நாட்கள்.

ஆரியம்தான் இந்த நாட்டை ஆட்சி செய்யும்;
அடிமைகளாய் தமிழனெல்லாம் கால்வீழ்ந்து,
வீரியமில்லா, விலங்குகளாய் வாழ்வோமெனில்,
வீணாக நமக்கெதற்குப் பொங்கல் நாள் ?
எரிமலையாய் தமிழன் இந்த நாட்டில்
என்றைக்கு எழுகிறானோ-அன்றுதான்
உரிமையுடன் பொங்கல் வைப்போம்-அதற்கு
ஒப்பரிய கலைஞர் பின் அணிவகுப்போம்.
- கவிஞர் காந்தன், M.A.,B.S.c.,M.Ed.
செயலாளார்
சேப்பாக்கம் தி.மு.க இலக்கிய அணி
சிந்தாதிரிப்பேட்டை,சென்னை - 600 002.
இதற்கு நான் அனுப்பிய பதில் அடுத்த பதிவில்.

Wednesday, February 25, 2009

காலம்.

காலமோ தொடர்ந்து செல்லும், 
கதை பல தொடர்ந்து சொல்லும், 
ஓய்வின்றி ஓடும்,நடக்கும்- 
நிற்பது போலத்தோன்றும்,
நில்லாதோடும்; 
 துளி நொடிப்பொழுதில் அசையும்- 
காலம் அனைத்தையும் ஆட்டி வைக்கும்.
 இளமையில்,இன்பத்தில் பறக்கும் காலம்; 
முதுமையில், துன்பத்தில் ஊர்ந்து போகும். 
அளவில்லா காலம்,நேரம்- நாட்களாய்,மாதமாய்,
வருடமாய், பல்லாயிரம் ஆண்டாய்; 
முடிவில்லா இந்த வட்டம்,முடிவது போலத்தோன்றும்.
 நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம்- என்றெல்லாம் உண்டா என்ன? இறவாத காலம்; பின்னெது இறந்த காலம்? 
நிலைப்படியில் இடித்துக்கொண்டு, 
நிலைப்படி இடித்ததென்று,சொல்லும் உலகம்.
கைநழுவிப் போனதென்று சொல்லக்கூச்சம்-
நாம் மறந்துவிட்ட காலமே இறந்த காலம். 
எது நல்ல நேரமென்று என்னைக்கேட்டால்
இதுவென்று சொல்லுமுன்னே கடந்து போகும்.
இன்னாளில் ஓட்டம் வேகம் பின்னாளில் பயனாகும் ; 
முயற்சி இல்லையென்றால், முயலும் தோற்கும். 
அளப்பரிய காலம் ஆனால் நாம் இருப்பதோ கொஞ்ச காலம்.
காலத்தைக் கடன், வாங்க- கொடுக்க சேமிக்க- இயலாது; 
ஆனாலும்,
இருக்கின்ற காலத்தில் நற்செயல்கள் செய்திட்டால்
காலத்தை வென்று நிற்போம்!

Friday, February 13, 2009

கலைந்த கனவுகள்.

(1973-ம் ஆண்டு பிற்பகுதியில் நண்பர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு பதிலாக அனுப்பியது. அவர் தன்னுடன் படித்த பெண்ணைக் காதலிப்பதாக நினைத்தார். அவளை மணக்க விரும்பி என் கருத்தையும் கேட்டார். நான் அவருக்கு அனுப்பிய பதில் இது. கவிதையா இல்லையா என்று படிப்பவர்கள்தான் சொல்லவேண்டும்.) 

ஆருயிர் நண்பனுக்கு, 

அறிந்தது போல் இருந்தாலும் அறியாப்பருவம். 
பாலியல் அறிந்துகொள்ளத் துடிக்கும் பருவம். 
அனுபவம் எனக்குண்டென்று கேட்கிறாயோ?
நான் சூடு கண்ட பூனையென்று அறிவாய் தானே? 
தண்ணிலவை மேகங்கள் மறைக்கப்பார்க்கும் 
நட்புணர்வை மோகங்கள் கொச்சையாக்கும்; 
ஆனாலும் இவையெல்லாம் மறைந்து போகும் 
அறிவென்னும் ஒளி வந்தால் தெளிவுண்டாகும். 
செம்மண்ணில் பெய்கின்ற மழையின் ஈரம் 
செந்நிறத்தைப் பெறுவதுவோ தெரிந்த சேதி;
நன் மனத்தில் பிறக்கின்ற அன்பு தாகம்
நன்செய்யில் பயிர்போல நன்றாய் வளரும். 
 உள்ளத்தில் உறுதி மட்டும் இருந்துவிட்டால் 
உலகெல்லாம் காலுக்கு கீழே காணும். 
துடிக்கின்ற இதயத்தில் உண்மை அன்பு,
அது அழிகின்ற உலகத்தில் அழியாப் பண்பு. 
துள்ளும் இளமையெல்லாம் சிலநாள் பொழுது.
நெஞ்சை அள்ளும் அழகெல்லாம் தேயும்பொழுது. 
ஈன்றவர்க்கு பெற்றகடன் தீர்க்கும் முன்னே-
வேறு பெண்ணைத் தேடுவது சரியா நண்பா ? 
ஓடுகின்ற ஆறெல்லாம் கடலைச்சேரும் – பெண்ணை 
நாடுகின்ற ஆசையெல்லாம் உடலைச்சாரும்.
காதல் பாடுகின்ற பெண்ணுக்கு காட்டும் பரிவில்- பாதியேனும்,
பாடு படுகின்ற பெற்றோர்க்கு உண்டா,இலையா? 
கடல் தோன்றிப்பாய்கின்ற நதியும் உண்டு- 
அது கண் தோன்றிப்பாய்கின்ற கண்ணீர் வெள்ளம். 
கடலவு கண்களிலே வீழ்ந்தபின்னே கரைசேர ஏதுவழி? எண்ணிப்பார்ப்பாய். காதலுக்கு எதிரி நான் இல்லை,காதலிக்கு மட்டும் தான்! 
என் காதல் தோற்றதனால் எனக்குப்பாடம்.
நீ பாடம் கற்பதற்கு நல்ல வாய்ப்பு.
பெண்பாவம் எனக்கெதற்கு? 
மேலும் நீ கற்க என் வாழ்த்துக்கள்!