Tuesday, May 5, 2009

கொசுவை விரட்ட!

                      நான் கடைகளில் விற்கும் பலவகை கொசு விரட்டிகளைப்பயன் படுத்தி எதுவும் முழுப் பாதுகாப்பு அளிப்பதில்லை என்று கண்டுகொண்டேன். காயில்கள்,மேட்டுகள்,ஜெல்கள்,திரவங்கள்,உடலில் பூசிக்கொள்ளும் கிரீம்கள் என பலவற்றையும் தனித்தனியாகவும் ,ஒன்றுக்கு மேற்பட்டு கூட்டாகவும் பயன் படுத்தி வீரத்தில் சிறந்தது கொசுவா,மனிதனா என்று பட்டிமன்றம் போடும் அளவுக்கு அனுபவம்(!) வந்துவிட்டது. 

எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் கீழ்க்கண்ட குறிப்பு (ஆங்கிலத்தில்) சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணில் பட்டது. சினிமாவில் சொல்வதுபோல், (எதெல்லாமோ பண்ணியிருக்கோம்,இதைப் பண்ண மாட்டோமா?) இதையும் நான் முயற்சித்துப் பார்த்தேன்.இதுவும் 100% உத்திரவாதம் இல்லை. ஆனால் இது நம் உடம்புக்கு கெடுதி விளைவிக்காது.

                                        இதை, இருட்டுவதற்கு முன்/கொசுக்கள் படையெடுப்பற்கு முன் பயன்படுதி கொசுக்களை விரட்டிவிட்டு சன்னல்களை மூடிவிடவேண்டும். புகை போடுதல் (Fumigation) பூச்சிகளுக்கு எதிரான ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாகும்.பெரும்பாலும் ரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்படும். ரசாயனப்புகை ஒரு விரட்டி (repellent) யாக செயல் படுகிறது. என்ன, அந்த புகையை நாம் தாங்கிக்கொள்ள வேண்டும்! 

உபயோகப்படுத்திப் பார்த்துவிட்டு கொசுவைவிட புகை பரவாயில்லையா என்று எனக்கு சொல்லுங்கள். இதற்குத்தேவையான பொருட்களை மிகவும் சுலபமாக சேகரிக்கலாம். தேவைப்படும் பொருள்கள்: 1. வேப்பம் இலைத்தூள் – 1 பங்கு 2. நெல் தவிடு – ½ பங்கு 3. மஞ்சள் சிறு சிறு துண்டுகள் - ½ பங்கு 4. கடுகு – 1/10 பங்கு 5. சாம்பிராணித்தூள் – 1/10 பங்கு இதில் வேப்பம் இலைகளைக் காயவைத்து அரைப்பதுதான் கொஞ்சம் சிரமமான வேலை. மேற்கண்ட பொருட்களை நன்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.இக் கலவையில் சிறிதளவு எடுத்து நிலக்கரி தணலில் போட்டால், வரும் புகை கொசுவை விரட்டப்போதுமானது. எங்கள் வீட்டில் உள்ள வேப்பமரத்தில் இருந்து கிளைகளை வெட்டி மொட்டை மாடியில் காயவைத்து இலைகளை (காற்றில் பறந்தது போக மீதி) சேகரித்தேன்,மற்ற சாமான்களை கடையில் வாங்கினேன்.வேப்பம் இலைகளயும் மஞசள் துண்டுகளையும் எங்கள்வீட்டு பழைய மிக்சியில் போட்டு அரைத்ததில் ஜார் மற்றும் மோட்டார் இரண்டும் சரி செய்யமுடியாத அளவுக்கு கெட்டுப்போயின. என் மனைவியிடம் பாட்டு வாங்கிகொண்டேன். புது மிக்சி வாங்கி அவளை சமாதானப்படுத்தினேன்(வேறு வழி?).

கவுண்டமணி சொல்வதுபோல் ‘வாழ்க்ழ்கையில் இதெல்லாம் சகஜமப்பா”. 
சரி பாயின்டுக்கு வருவோம். எங்கள் வீட்டில் அம்மி,கல் உரல்,மர உரல் பொன்ற எந்த சாதனங்களும் இல்லாததால் நான் இந்த பொருட்களை அரைக்காமலே பயன் படுத்தினேன்.ஓரளவு பயன் கிடைத்தது. புகை போடுவது ஒரு நுண்கலை(high tech) என்று சொல்லி என் மனைவி அந்த வேலையை என் தலையில் கட்டிவிட்டாள். தவிரவும் நான் கல்லூரியில் விவசாயம் படிக்கும்போது பலவேறு பாடங்கள் படித்ததில் பூச்சி இயல் ((entomology) படித்த விஷயம் அவளுக்கு நினைவிருந்தது.(எனக்கு மறந்து விட்டது!) 
எங்கள் வீட்டில் பழைய குக்கர் ( அது நன்றாகத்தான் இருந்தது; புது குக்கர் வாங்கத் திட்டமிட்டு என் மனைவி அதை பழைய குக்கர் ஆக்கிவிட்டாள்!) 

அதை எடுத்து விறகுக்கரி போட்டு தணல் உண்டாக்கி மேற்கண்ட பொருட்களை (அரைக்காமலே) மேலே பரப்பி புகை உண்டாக்கினேன். (நிலக்கரியோ,பழுப்பு நிலக்கரியோ (leco) என்றால் சரியாக இருந்திருக்கும். சாயந்திரம் தினமும் இது என் வேலையானது.சன்னல்களைத்திறப்பதும், பின் புகை போடுவதும், சிறிது நேரம் கழித்து சன்னகளை மூடுவதும், இப்படி வீட்டில் உள்ள எல்லா அறைகளையும் சுற்றி வந்தால் ‘விடிந்து விடும்’. 

ஒரு கையில் குக்கரைப்பிடித்துக்கொண்டு மறுகையால் கைவிசிறி கொண்டு விசிறினால் புகை அபரிமிதமாக வரும். கண் லேசாக எரியும்.கண் கண்ணாடி அணிந்து சமாளிக்கலாம். அத்துடன் அரைக்காமல் போட்டதால், பாதி எரிந்த மற்றும் எரிந்துகொண்டிருக்கும் வேப்பம் இலைகள் குக்கரைவிட்டு விடுதலை பெற்று படுக்கை சோஃபா மேலெல்லாம் அடைக்கலம் அடைவது வழக்கம். இதைக்கண்ட என் மனைவி, ஒரு வாரம் பொறுத்துப்பார்த்துவிட்டு நீங்கள் புகை போட்டது போதும் என்று நிறுத்திவிட்டாள்.நான் மனசுக்குள் மத்தாப்புடன் “ நீ சொல்கிறாயே என்று விட்டு விட்டேன்; இது எனக்கொன்றும் சிரமமில்லை’, என்று பந்தா காட்டினேன். அவள் “உங்களுக்கென்ன சிரமம்? நீங்கள் புகை போட்டபின் வீட்டை பெருக்கினால்தான் சரிப்பட்டு வரும். விளக்கு வைத்தபின் பெருக்கக் கூடாது என்று என் பாட்டி சொல்லி இருக்கிறாள்” என்றாள். எனக்கு எந்த தாத்தாவும் விளக்கு வைக்கும் நேரத்தில் புகை போடக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் மனைவி பேச்சை அனுசரித்து (சொல்படி கேட்டு என்று பொருள் கொள்க!) நடந்து கொள்ளும்படி சொல்லி இருந்தார்.இப்படியாக எனது ஆராய்ச்சி நடுவிலேயே நின்று போய்விட்டது. 

 இன்னொரு விஷயம் விட்டுப்போய்விட்டது எங்கள் வீட்டுக்கு மாலையில் காப்பி நேரத்துக்கு வந்து “இந்தப்பக்கம் வந்தேன்,சும்மா உங்களைப்பார்த்துவிட்டுப்போகலாம்”, என்று வழிந்துவிட்டு என் மனைவி கையில் காப்பி வாங்கி குடித்து ‘ருசி கண்ட’ ஒருவர் இந்த புகை போட ஆரம்பித்ததும் தன் வருகையை நிறுத்தி விட்டார். அவர் என் மனைவிக்குத் தூரத்து உறவு. காரணம் புரியாத என் மனைவி அவரைப் பார்த்தால் வீட்டுக்கு அழைக்கும்படி சொல்லி இருக்கிறாள்.அவருக்கு டிக்ரி காப்பி கொடுக்கும் என் மனைவி எனக்கு டிப்ளமா காப்பி தான் கொடுப்பாள். “வர்றவங்க நம்மைப்பத்தி என்ன நினைப்பாங்க. நாம் எப்படியாவதுஅட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.” என்று நீர் மோர் போல நீர் காப்பி தருவாள். இப்போதெல்லாம் எனக்கு ஓரளவு சுமாரான காப்பி கிடைக்கிறது. இது புகை போட்டதனால் வந்த பலன். சமீபத்தில் இன்னொரு நண்பர் வேப்பம் இலைகளையும்,வேப்பம் பட்டைகளையும் (காயவைத்தது) கலந்து தணலில் போட்டு படுக்கை அறையில் வைத்துவிட்டால் அது கொசுவிரட்டி காயில் போல பலன் கொடுக்கும் என்றார். அதை இன்னும் முயற்சிக்கவில்லை.பழைய குக்கரை பாத்திரக்கடையில் போட்டு வேறு ஏதோ பாத்திரம் வாங்கிவிட்டாள் என் மனைவி. புது குக்கர் பழசாகட்டும் என்று காத்திருக்கிறேன்! இதைப்படித்துவிட்டு நீங்கள் யாராவது முறைப்படி கலவை தயார் செய்து புகை போட்டு விளையும் பலன் களை எனக்குத்தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன்.எனக்காக நீங்கள் இது கூட செய்ய மாட்டீர்களா என்ன?. 

 வேப்ப மரம் பார்த்திராதவர்களுக்காக எங்கள் வீட்டு வேப்பமரம் படம் மேலே .

No comments: