1.தமிழக வாக்காளருக்கு,சில கேள்விகள் :
தன் முயற்சி இல்லாமல் தவிப்பது உன் நிலையோ,
உன் திறமை உணராமல் உழல்வது உன் விதியோ?
மீன் குஞ்சு நீ, நீந்துவது என்ன கஷ்டம்.?
நீரிலும் நடப்பேன் என்றால் அதுவுன் இஷ்டம்!
மற்றவர் முந்திப் போக , எப்போதும் புறமே கூறு:
கரையிலே நின்றிருந்தால், கற்பது நீ எவ்வாறு?
கற்பதுன் கடன் என்று உணரவில்லை,
நல்லதும் கெட்டதும் அறிவாய் இல்லை.
நான் எழுந்து நின்று இரு கைகள் நீட்டினாலும்
உன் தலை நிமிர்ந்து நீ, நோக்க மாட்டாய்.
ஈரடி நானெடுத்து வைத்தாலும்,
உன் காலால்
ஓரடியும் முன்னாலே வைக்க மாட்டாய்.
உழைக்காமல் உண்பதற்குக் கற்றுக் கொண்டாய்
இரவாமல் பிழைக்கும் வழி, என்ன யோசி.
அடுத்தவர் கால் பிடித்து வாழும் போது
அடிமை நீ அல்லாமல் வேறு என்ன?
கல்வியே வாழ்க்கை இல்லை, ஆனால்
வாழ்க்கையில் கல்வி உண்டு.
தேன் என்று சொன்னாலே நக்கும் கூட்டம்
இலவச வலைக்குள்ளே வந்து மாட்டும்!
கற்றவன் தப்பு செய்வான், தப்பி விடுவான்
மற்றவன் என்ன செய்வான்,மாட்டிக் கொள்வான்!
தவறே செய்தாலும், சரியாகச் செய்யவேண்டும்,
அன்றேல்
செய்தது சரியென்று நிறுவ வேண்டும்!
இயலுமென அறியாமல் இருக்கின்றாய்,இருக்கின்றாயா?
பட்டும் என்ன பயன், பாடம் கற்றாயா?
ஆண்டுவிட்ட கட்சி பல , ஒருபயனும் இல்லை,
ஆண்டுபல ஆயிடினும், நீ கற்றாய் இல்லை!
உன்னை அறியாமல், நீ செய்யும் தவறெல்லாம்
என்னை அறியாமல், நானும் செய்கின்றேன்
அனைவரும் போகும் பாதை ஆட்டின் பாதை
ஆராய்ந்து பார்த்தால் நீயறிவாய் புதிய பாதை!
2 தமிழக வாக்காளரின் பதில் :
மந்தைக்குள் மறி ஆடு,நானோர் ஆடு!
எந்தனுக்குன் உபதேசம் வேண்டாம் அண்ணே.
தந்தைக்கு உபதேசம் தந்து விட்ட
கந்தனுக்கு
உடன்பிறவா தம்பியா நீ?
பொங்கலைப்போல், தீவளி போல்
தேர்தலும் ஒன்று,
செலவில்லாப் பண்டிகை,வரும்படி உண்டு!
கட்சி, கொள்கை, நேர்மையெல்லாம் நமக்கெதுக்கு;
காசு கொடுத்தவனுக்கு போடு ஓட்டை, வம்பெதுக்கு!
.