Friday, September 26, 2008

கவிதையும்,மனைவியும்

வாக்கியத்தை உடைத்து,
வார்த்தைகளை முன் பின் போட்டு,
வசனத்தை கவிதையாக்கி,
வருகின்றார் புதுக்கவிஞர் என்னைப்போல!

வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடிப்பு,
வால் வைத்த பட்டத்தின் அலைக்கழிப்பு
வானத்தில் வட்ட நிலா, கடலில் அலைகள்,
மோனத்தில் சிரிக்கும் குழந்தை,
மழையின் சாரல்,மலையின் அழகு,
சூரிய எழுச்சியும்,வீழ்ச்சியும்
தோட்டத்தில் விரியும் பூக்கள்-
இதுவெல்லாம் இல்லாமல் என்ன கவிதை?

சமூகப்பிரக்ஞை உண்டென்று
சமுதாய அவலங்கள்,
அநீதிகள். ஊழல்கள்
என்றெல்லாம் எழுதப்போனால்
பத்தோடு பதினொன்று
அத்தோடு இது வொன்றென்று
மிதியடியின் கீழே தள்ளி,
மறைப்பார்,மறுப்பார்.

'காலையில் எழுந்தவுடன்
காரியங்கள் பார்க்காமல்
கணிணி முன் அமர்ந்து
காலத்தைப் போக்குகின்ற என் கணவா,
கார்பரேஷன் தண்ணீர் பிடித்து,
காய்கறி வாங்கிவந்து, பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி,
எல்லாம் நான் செய்தால்,
வீட்டிலே நீர் எதற்கு?'
என்கின்றாள் என் மனைவி

அச்சில் ஏற்ற முடியவில்லை,அவள் சொன்ன எல்லாமும்
பச்சையாய்ப் பேசவெல்லாம் எங்கேதான் கற்றாளோ?
முட்டுகின்ற மாட்டுக்கு தீர்வு உண்டு,
திட்டுகின்ற பத்தினிக்குத் தீர்வு ஏது?

வாக்கியத்தை உடைத்து,
வார்த்தைகளை முன் பின் போட்டால்,
வசனமும் கவிதையாகும்.
மனைவியை என்ன செய்தால்
மீண்டுமவள் பெண்ணாவாள்?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்,
எழுதமாட்டேன் இனிக்கவிதை !

Tuesday, September 9, 2008

தனக்கொரு நீதி

நான் சென்ற திங்கட்கிழமை சென்னையில் இருந்து அரசுப் போக்குவரத்துக்கழக பஸ்சில் கடலுர் வந்து கொண்டிருந்தபோது எனக்கு முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த இருவரின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.அதில் ஒருவர் பஸ்சின் நடத்துனர்,மற்றவர் அவருடைய நண்பர் என்று நினைக்கிறேன்.அவரும் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிபவர்.
இருவரும் சமவயதுக்காரர்கள் . வயது 50 இருக்கலாம். இனி அவர்களின் உரையாடல்.

“ஊர் ரொம்ப கெட்டுபோச்சுப்பா.நேற்று பாண்டியில் நைட் ஹால்ட்.சரின்னு பாருக்கு போனேன்.பதினெட்டு,இருபது வயசு பயல்களா நிறைய இருந்தாங்க. நம்ம மாதிரி வயசாளிங்க ஒருத்தர் ரெண்டுபேர் தான்”

“நீ சொல்றது கரெக்ட்பா. நானும் பார்த்துகிட்டுதான் வர்றேன்.வர வர வாலிப வயசுப்பசங்கள்ளாம் தண்ணியிலே கிடக்கறானுங்க. நம்ம தான் ரிலா க்ஸேஷனுக்குப் போறோம்.”

‘இவங்களுக்கு என்ன கவலை சொல்லு பார்க்கலாம்.பிள்ளையா,குட்டியா?”
“உனக்கு நினைவிருக்கா, SSLC படிக்கும்போது சரக்கெல்லாம் எவ்வளவு சீப்பா கிடைச்சது?”

“அதையேன்பா ஞாபகப்படுத்தறே? அப்பா பாக்கெட்டுல சில்லற நோட்டா கிடக்கும்.ரெண்டை உறுவிட்டா அவருக்கு கணக்கு தெரியாது.ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு பார்ல ஒக்காந்து போட்டுட்டு போறவர பொண்ணுங்களை டாவடிப்போமே. அது ஒரு காலம்பா”

“ஒரு தபா அப்பாகூட வேல பார்க்கிறவர் பார்ல நம்மள பார்த்துட்டு வீட்டுல சொல்லி மாட்டி வச்சாரே?எங்க அப்பா கண்டுக்கிடல.தாயில்லாப் பையன்னு மெரட்டி உட்டுட்டாரு. ஒங்க அப்பாதான் பெல்ட கழட்டி வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார்.”

“அதுக்கு தான் அவரு சைக்கிள் சீட்டு,டயரு எல்லாத்திலயும் பிளேடு போட்டு அவுருக்கு தெண்டம் வச்சாச்சே.”

“என்னதான் சொல்லு,அப்ப இருந்த மாதிரி ஜாலி இனிமே வராது.”

திண்டிவனம் வந்துவிட்டதால் நடத்துனரின் நண்பர்,”வர்றெம்பா.தங்கச்சியை கேட்டதாச்சொல்லு. பொண்ணுக்கு எப்ப கல்யாணம்,” என்று இறங்கி விட்டார்.

நான் யோசித்துப்பார்த்தேன். இவர்கள் SSLC படிக்கும்போது வயசு 17க்கு மேல் இருக்காது. அப்போது பாருக்கு போவது தப்பாகத்தெரியவில்லை.இந்த வயதில் போவதும் தப்பாகத்தெரியவில்லை.
தன்பிள்ளை வயதுக்காரர்கள் பாருக்குப் போவதும்,வயசுக்கோளாறினால் செய்கிறகலாட்டாக்களும் தப்பாகத்தெரிகிறதா?

கதைகள்

கதை என்ற வார்த்தையே மிகவும் abuse செய்யப்பட்டு விட்டதாக உணர்கிறேன்.சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் குமுதம், ஆனந்தவிகடன் படித்தவர்களுக்கு படித்து முடித்ததும் மனதில் ஒரு தாக்கம் (impact) தெரியும். ஒரு மகிழ்ச்சியோ,சோகமோ,நகைச்சுவை உணர்வோ,பிரமிப்போ,வெறுப்போ,விரக்தியோ, ஏக்கமோ,உத்வேகமோ ஏதோ ஒரு உணர்ச்சி தூண்டப்பெற்று அது சில/பல நாட்கள் படிப்பவரின் நெஞ்சைவிட்டு அகலாது.கதை மறந்து விட்டாலும்,அது தோற்றுவித்த உணர்வுகள் நீண்ட நாட்கள் நாரத்தங்காய் ஊறுகாய் சாப்பிட்டு பலமணி நேரத்திற்குப்பின்னும் அதன் வாசம் வாயிலிருந்து வருவது போல் இருக்கும்.
கால ஓட்டத்தில் நிறைய விஷயங்கள் தங்கள் தன்மையை இழந்து விட்டன. இதற்கு சிறுகதையும் விலக்கல்ல.நிறையப்புத்தகங்கள்,நிறையப் பத்திரிக்கைகள்,நிறைய எழுத்தாளர்கள்,நிறையக்கதைகள். இதனால் சிறுகதை மலிந்துவிட்டது. மலிந்துவிட்டது என்றால் அதில் சிலது substadard ஆக இருப்பதையும்,அதையும் "கதை"க்குள் கொண்டுவர அதனுடைய இலக்கணத்தை விரிவுபடுத்தி அதை நீர்த்துப்போகச்செய்யும் முயற்சிகளும் புரிந்து கொள்ளத்தக்கவையே. ஒவ்வொரு கதாசிரியரும் ஒவ்வொரு style ல் எழுதுகிறார்கள்.அதற்குண்டான வாசகர்களைப்பெறுகிறார்கள்.சில கதைகள் சிலருக்குப் புரியாமல் போவதும் சிலர் எழுதுவது யாருக்கும் புரியாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.ராணியில் வரும் கதைகளும்,கல்கியில் வரும் கதைகளும் வெவ்வேறு வாசகர் வட்டத்தை அடைவதும் அதை படிப்பவர்களின் புரிந்து கொள்ளும் திறன் வேறுபடுவதும் தெரிந்த விஷயம்.பாலகுமாரன் கதைகள் சிலருக்குப் பிடிக்கிறது,சிலருக்குப்புரிவதில்லை அதனால் பிடிக்கவில்லை.
என் சிறுவயதில் ஊரில் பெரியவர்கள் கூட சாதாரண போலீஸ்காரரைக் கண்டால் பயம் கலந்த மரியாதையுடன் ஒதுங்கி நிற்பார்கள்.நாளடைவில் ஊர்க்காரர்களுக்கும் பயம் போய்விட்டது.போலீஸ்காரர்களும் தங்கள் மரியாதையை குறைத்துக்கொள்ளும் வகையில் நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதேபோல் அப்போதெல்லாம் படிப்பவர்களின் ரசனையும் உயர்வாக இருந்தது. எழுதுபவர்களும் சிறப்பாக எழுதினார்கள்.இப்போது எதைஎழுதினாலும் யாராவது படிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.எனவே எழுத்தாளர்கள் (?) பெருகி விட்டார்கள். இந்த diversified atmosphere ல் சிறுகதைக்கு இலக்கணம் எதற்கு?இலக்கணம் மீறிய கவிதைகள் போல, இலக்கணம்(இலட்சணம்) இல்லா கதைகளையும் பொறுத்துக்கொள்ளவேண்டியது தான்.பொறுத்தார் பூமி ஆள்வார்!