Friday, September 26, 2008

கவிதையும்,மனைவியும்

வாக்கியத்தை உடைத்து,
வார்த்தைகளை முன் பின் போட்டு,
வசனத்தை கவிதையாக்கி,
வருகின்றார் புதுக்கவிஞர் என்னைப்போல!

வண்ணத்துப் பூச்சிகளின் சிறகடிப்பு,
வால் வைத்த பட்டத்தின் அலைக்கழிப்பு
வானத்தில் வட்ட நிலா, கடலில் அலைகள்,
மோனத்தில் சிரிக்கும் குழந்தை,
மழையின் சாரல்,மலையின் அழகு,
சூரிய எழுச்சியும்,வீழ்ச்சியும்
தோட்டத்தில் விரியும் பூக்கள்-
இதுவெல்லாம் இல்லாமல் என்ன கவிதை?

சமூகப்பிரக்ஞை உண்டென்று
சமுதாய அவலங்கள்,
அநீதிகள். ஊழல்கள்
என்றெல்லாம் எழுதப்போனால்
பத்தோடு பதினொன்று
அத்தோடு இது வொன்றென்று
மிதியடியின் கீழே தள்ளி,
மறைப்பார்,மறுப்பார்.

'காலையில் எழுந்தவுடன்
காரியங்கள் பார்க்காமல்
கணிணி முன் அமர்ந்து
காலத்தைப் போக்குகின்ற என் கணவா,
கார்பரேஷன் தண்ணீர் பிடித்து,
காய்கறி வாங்கிவந்து, பிள்ளைகளை
பள்ளிக்கனுப்பி,
எல்லாம் நான் செய்தால்,
வீட்டிலே நீர் எதற்கு?'
என்கின்றாள் என் மனைவி

அச்சில் ஏற்ற முடியவில்லை,அவள் சொன்ன எல்லாமும்
பச்சையாய்ப் பேசவெல்லாம் எங்கேதான் கற்றாளோ?
முட்டுகின்ற மாட்டுக்கு தீர்வு உண்டு,
திட்டுகின்ற பத்தினிக்குத் தீர்வு ஏது?

வாக்கியத்தை உடைத்து,
வார்த்தைகளை முன் பின் போட்டால்,
வசனமும் கவிதையாகும்.
மனைவியை என்ன செய்தால்
மீண்டுமவள் பெண்ணாவாள்?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்,
எழுதமாட்டேன் இனிக்கவிதை !

No comments: