Friday, October 30, 2015

பட்டா, வில்லங்க சர்ட்டிஃபிகேட்,சிட்டா,அடங்கல்.


பட்டா
அசையா சொத்துக்களான நிலம்,மனை,வீடு போன்றவை யார் பெயரில் இருக்கிறதோ அவர் பட்டாதார் எனப்படுவார்.  
ஒரு சொத்து அப்பா,பெரியப்பா சித்தப்பா என்று எல்லோருக்கும் பொது சொத்தாக இருந்தால் அது கூட்டுப்பட்டா எனப்படும். ஒரு பட்டாதார் இறந்தபின் அவரது பாரம்பரிய சொத்துக்களை வாரிசுதாரர்கள் அனைவரும் தங்களுக்குள் பாகப்பிரிவினை செய்யாமல் அனுபவித்து வந்தாலும் அல்லது வாய்மொழியாகப் பாகப் பிரிவினை செய்து கொண்டு அல்லது பாகப்பிரிவினை பத்திரம் எழுதி பதிவு செய்யமல் விட்டாலும் அவர்கள் அனைவருடைய பெயரும் கூட்டுப் பட்டாதாரர்கள் என RR (Revenue records) ல் குறிக்கப்பபடும். 

பட்டா என்பது சொத்தைப் பொறுத்தவரை வாகனங்களுக்கான RC book போல. அதில் பெயர் மாற்றம் செய்யாதவரை யார் பெயர் இருக்கிறதோ அவரே சட்டபூர்வ உரிமையாளராகக் கருதப்படுவார்.
பாரம்பரிய சொத்துக்கள் பாட்டன் முப்பாட்டன் பெயரிலேயே ரெவினியு  (விஏஒ/வட்டாட்சியர் அலுவலக) ரிக்கார்டுகளில் இருக்கும். தலைமுறைகள் கடந்தாலும், அதை பிறருக்கு விற்று விட்டாலும் ,வாங்கியவர் பட்டாவை  தனது  பெயருக்கு மாற்றாதவரை RR ல் அந்த சொத்துக்கள் பழைய (original owner)  பெயரிலேயே இருக்கும்

நியாயப் படி பார்த்தால் ஒரு விற்பனைப் பத்திரம் பதிவானதும், பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அந்த செய்தி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு வாங்கியவர் பெயர் ரெவினியு ரிக்கார்டுகளில் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் இது மேலதிக வேலை என்பதால் இதை யாரும் செய்வதில்லை.
எனவே சொத்து வாங்கியவர் VAO மூலமாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பட்டாமாற்றத்திற்கு மனு செய்யவேண்டும்,அத்துடன் ஐடி ப்ரூஃப், விற்பனைப் பத்திரக் காப்பி,வில்லங்க சர்டிஃபிகேட், இணைக்கவேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் சொல்லும் தொகைக்கு ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தி ரசீது சமர்ப்பிக்கவேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திர எழுத்தாளர் உங்களை வழி நடத்துவார். எல்லா இடங்களிலும் ரசீது இல்லாகட்டணம்உண்டு.

பட்டா மாற்றம் செய்து உங்கள் பெயரில் பட்டா வழங்க ஒரிரு மாதங்கள் அல்லது பல மாதங்கள் கூட ஆகலாம். அடிக்கடி வட்டட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வே செக்‌ஷனுக்கு சென்று விசாரித்து வரவேண்டும்.

கூட்டுப் பட்டாவைப் பிரித்து தனிப் பட்டா வாங்குவதற்கும் உரிய ஆவணங்களுடன் VAO மூலம் விண்ணப்பிக்கவேண்டும்

வில்லங்கம்: Encumbrance
வில்லங்கம் என்பது ஒரு அசையா சொத்தைப் பாராதீனம் (alienation) செய்யும் போது உரிமையாளருடைய உரிமைக்கு வரும் பங்கத்தைக் குறிக்கும், உதாரணமாக ஒரு சொத்தை விற்றால், பாகப்பிரிவினை செய்தால், அடமானம் (mortgage) வைத்தால், தானமாகக் கொடுத்தால் அந்த நிகழ்வுகள் தேதியுடன், என்ன வகையிலான பாராதீனம், எழுதிக் கொடுத்தவர்,பெற்றுக் கொண்டவர் பெயர்கள் முதலியன பத்திரப் பதிவு அலுவலகத்தில் குறித்து வைக்கப்படும். நீங்கள் ஒரு சொத்தை வாங்கும்போது உங்களுக்கு சொத்தை விற்பவர் தான்அந்த சொத்தை வாங்கியதற்குண்டான விற்பனை பத்திரம் (தாய்ப் பத்திரம்/மூலப் பத்திரம்) , பட்டா காப்பி (RR ல் உள்ளபடி), நில வரி வீட்டு வரி கட்டிய ரசீது, உங்களிடம் காட்டுவார்.
வில்லங்க சர்டிஃபிகேட்(Encumbrance certificate- EC) சொத்து எந்த சார் பதிவாளர் அலுவகத்தின் jurisdiction ல் வருகிறதோ அங்கு மனு செய்து வாங்க வேண்டும். பாரம்பரிய சொத்தாக இருந்தால் அன்றைய தேதிக்கு முந்திய 35 முதல் 50 ஆண்டுகளுக்கு EC வாங்கவேண்டும். வருடங்களைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். EC Online லும் விண்ணப்பிக்கலாம், விற்பவர் தன்னுடைய பெயரில் அல்லது அவருக்கு விற்றவர் பெயரில் பட்டா வைத்திருந்தால் அந்த தேதியில் இருந்து EC வாங்கினால் போதும். விற்பவர் கொடுக்கும் விவரங்கள் மூலப் பத்திரம் ,EC காப்பி, வரி கட்டிய ரசீது, போன்றவற்றை உங்கள் வக்கீலிடம் காட்டி அவருடைய கருத்தை (Legal opinion) எழுத்து மூலம் வாங்கிக் கொள்ளவும்.
பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வெளியில் அமர்ந்திருக்கும் Document writer கள் (இப்பொதெல்லாம் தனி அலுவலகமே வைத்திருக்கிறர்கள்!) உங்களுக்கு துணை புரிவார்கள். சேவைக் கட்டணம் தனி!
ஒரு சொத்தின் ஒரு பகுதியை மட்டும் அல்லது ஒரு மனைப்பிரிவில் உள்ள பல மனைகளில் ஒன்றை நீங்கள் வாங்கினால் அந்த மனைப் பிரிவு அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், படாவிட்டாலும் RR ல் மனை பிரிக்கப்பட்ட விவரம் வரவில்லையென்றால் நீங்கள் சர்வேயர் அலுவலகத்தை (வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இருக்கும்) அணுகவேண்டும். தேவைப் பட்டால்சர்வேயர் மனையை/நிலத்தை நேரில் ஆய்வு செய்து/அளந்து பார்த்து
உங்களுக்கு பட்டா பெறத் தேவையானதைச் செய்வார்.

சொத்து ஆதி காலத்தில் யார் பெயரில் இருந்தது, யார், யார் கை மாறி, உங்களுக்கு விற்பவரிடம் வந்தது (lineage) என்றும் சொத்து அடமானம் வைக்கப்பட்டிருந்தால் அது விலக்கப்பட்டதற்கான ருசு முதலிய விவரங்களும், தற்போதைய உரிமையாளருக்கு அந்த சொத்தை விற்பதற்கு உரிமை உள்ளது என்றும் legal opinion ல் காணப்படும்.
திருப்தியான legal opinion, EC இருந்தால் மட்டுமே ஒரு சொத்தை வாங்கவேண்டும். கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்தை வாங்கும் போது அதிக கவனம் தேவை. பட்டாதாரர்களில் மைனர் பெயர் இருந்தால் வக்கீலின் ஆலோசனைப்படி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.
Please see http://www.thehindu.com/features/homes-and-gardens/q-and-a/understanding-the-encumbrance-certificate/article4298465.ece

சிட்டா, அடங்கல்.
விவசாய நிலங்கள் யாருடைய உபயோகத்தில் இருக்கிறதோ அந்த விவரம் RR ல் இருக்கும். அதைக் காப்பி செய்து குறிப்பிட்ட படிவத்தில் (சிட்டா) VAO வழங்குவார். சிட்டா வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது தேவை.. சிட்டாவில் கிராமத்தின் பெயர், சர்வே எண், உட் பிரிவு,நிலத்தின் பரப்பு, நன்செய் அல்லது புன்செய் போன்ற விவரங்கள் இருக்கும்.
அடங்கல் என்பது குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட ஆண்டு (பசலி) என்ன பயிர் இருக்கிறது என்ற விவரம் இருக்கும் . கிராமம், சர்வே எண், பரப்பு, பசலி மற்றும் நிலத்தில் உள்ள பயிர் பற்றிய விவரங்கள் இருக்கும்..  சிட்டா அடங்கல் VAO விடம் நேரடியாகப் பெறலாம். சிட்டா வட்டாட்சியர் அலுவலத்திலும் கணிணி மூலம் பெறலாம்.
For online services
www.tnreginet.net/igr/webAppln/EC.asp


Wednesday, July 22, 2015

அம்மா நீ என் முதல் உறவு.

அம்மா நீ என் முதல் உறவு
அப்புறமெல்லாம் மேல் வரவு!

அக்கா எனக்கு இரண்டாம் தாய்
என் மகளெனக்கு இன்னொரு தாய்!

அப்பா என்பவர் முதல் நண்பர்
மகன் எனக்கு மற்றொரு நண்பன்!

நல்ல மனைவி  ஒரு வரம்
அதற்கு செய்ய வேணும் தவம்!

நண்பர்கள் சூடான வேர்க்கடலை-அதில்
நன்றியற்ற சிலர் சொத்தைக் கடலை.!

பார்க்கும் மக்கள் பலவாக
பழகினால் கொஞ்சம் இனிதாக
ஏனோ சிலர் மட்டும் புதிராக
எடுக்கிறார் ஆயுதம் எதிராக.!



வாழ்க்கை என்பது கலெய்டோ-ஸ்கோப்
மாற்றிப் பார்த்தால் உண்டு ஸ்கோப்!



Wednesday, March 4, 2015

அன்றொரு நாள் !


அன்றையதினம் வழக்கம்போல்தான் ஆரம்பித்தது. ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு அகதா கிரிஸ்டியை சிறிது நேரம் படித்துவிட்டு நான் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தபோது காலை மணி 8 ஆகிவிட்டது. சிறிது நேரம் கழித்து என் மனைவி எடுத்து வந்த கேரட் சாறை வாங்குவதற்காகத் திரும்பியபோது “என்னங்க இது, உங்க இடது கண் ஒரே ரத்தச்சிவப்பா மெட்ராஸ் ஐ மாதிரி இருக்கு”.



எனக்கு கண் உறுத்தலோ எரிச்சலோ எதுவும் இல்லை. கண்ணாடிமுன் நெருங்கிப் பார்த்தபோது இடது கண் செக்கச் செவேல். எனக்கு முன்பே கண் நீர் அழுத்த பிரச்சினை உண்டு.

 அன்று மதியமே புதுச்சேரி தவளகுப்பம் அரவிந்த் கண் மருத்துவ மனைக்குப் புறப்பட்டேன். அது சாதாரண கண் நோயைவிட மோசமாக இருக்கும் என்று பயம். டாக்டர் ஏதும் சீரியஸ் என்று சொன்னால் அது வீட்டம்மா காதில் விழவேண்டாம் என்று நினைத்ததால், துணைக்கு வருவதாகச்சொன்னவரை  மறுதளித்துவிட்டுப் புறப்பட்டேன். TVS 50 யில் , மருத்துவமனையை அடையும்போது மாலை மணி 3.30 ஆகிவிட்டது.

கண்ணைப் பரிசோதித்த நர்ஸ் கண் பார்வையில் மாற்றமில்லை எனவும் கண்ணாடியை படிப்பதற்கு மட்டும் பயன் படுத்தும்படியும் சொன்னார். இரண்டு கண்களிலும் லேசர் சிகிச்சைசெய்து உள்ளே லென்ஸ் வைத்திருப்பதால் தூரப் பார்வையில் பிரச்சினை இல்லை.

அந்த அறையிலிருந்து Glaucoma Clinic குக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்த நர்ஸ் என்னையும் இன்னொருவரையும் உள்ளே அழைத்துச்சென்று “தாத்தா, நீங்க இந்த சேர்ல உட்காருங்க, தாத்தா நீங்க அந்த சேரில் உட்காருங்க” என்றார். ஒரு இருக்கை மேசை பக்கத்திலும் இன்னொன்று சுவர் அருகிலும் இருந்தது,

எனக்குக் குழப்பம், எதில் உட்காருவது என்று. ”ஏம்மா, தாத்தா1 இதில் உட்காருங்க, தாத்தா2 அதில் உட்காருங்க என்று சொல்லி இருக்கலாமே” என்றேன். நர்ஸ் சிரித்தவாறே, “கண்ணாடி தாத்தா இங்கே உட்காருங்க, கண்ணாடி போடாத தாத்தா அங்கே உட்காருங்க” . நான் தான் கண்ணாடி இல்லாத தாத்தா. இப்போது சிரிப்பது என் முறை.

டாக்டர் கண்ணைப் பரிசோதித்துவிட்டு ”ரத்தநாளத்தில் இருந்து ரத்தம் கசிவதால்தான் கண் சிவப்பாக இருக்கிறது” என்ற அரிய கருத்தைச் சொன்னார். அடுத்து பயப்படுதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். நர்ஸ் அவர் பங்குக்கு கண்ணில் நீர் (drops) வார்த்தார்.

ஒரு மணி நேரம் சென்று தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது இருட்டிவிட்டது.
சாலைக்கு வந்து பார்த்தால் விளக்குகள் எல்லாம் கண்ணைக் கூசுமளக்கு பிரகாசமாகவும் வெளிச்சம் குறைவான பகுதிகள் ஒரே இருட்டாகவும் தோன்றின. முக்கிய சாலையை அடைந்து வண்டியை இடது புற ஓரமாக,தெளிவான இடங்களில் வேகம் கூட்டியும் (30 கி.மீ!) இருளான பகுதிகளில் சற்று சீராகவும் ஓட்டிவந்தேன். பிராந்திக் கடைகளுக்குஅருகில் திடீரென்று ஆட்கள் முளைக்கும்போது ப்ரேக் அடித்து சமாளித்தேன்.

கன்னியகோவிலை நெருங்கும்போது பிராந்திக்கடையில் இருந்து சாலையைக் கடக்கமுயன்ற குடிமகன் “இந்த வயசில பெரிசு தண்ணி போட்டுட்டு வண்டியில் ஏறி பண்ற அலம்பலைப் பாத்தியா” என்று பாராட்டினார். கூட இருந்த ஆள் (வரும் குடிமகன்தான்) “ கிழவா பத்திரமா வீட்டுக்குப் போய்ச்சேர்” என்று வாழ்த்தினார்.

முள்ளோடை வந்து பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தினால் பையன், “தல, எவ்வளவு போட” என்றான். என் தலையில் முடி இல்லாவிட்டாலும் அதையும் ஒரு தலையாக ஏற்றுக் கொண்டவனை நன்றியுடன் பார்த்தேன். தல என்றால் நடிகர் அஜித்தைத்தானே குறிக்கும்?. கொஞ்சம் யோசித்தபோது அந்தப் பையன் தலைவா என்பதைத்தான் சுருக்கி இருக்கிறான் என்ற உண்மை புலப்பட்டது.

ஒருவழியாக (one way இல்லைங்க!) வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஆளாளுக்கு நான் தனியாக கண் ஆஸ்பத்திரிசென்று வந்ததை எதிர்த்து கண்டனத் தீர்மானம் போட்டார்கள். இனிமேல் அதுபோல் செய்வதில்லை என்று உறுதி மொழி கொடுத்ததும், போனால் போகட்டும் என்று விட்டு விட்டார்கள்.

தலைப்பார்த்துவிட்டு என்னமோ விஷயம் என்று நீங்கள் இங்கே எட்டிப்பார்த்திருந்தால் I am very sorry!

படங்கள் : அரவிந்த் கண் மருத்துவமனையும் எதிரே உள்ள அழகான தோட்டமும்.