Wednesday, March 4, 2015

அன்றொரு நாள் !


அன்றையதினம் வழக்கம்போல்தான் ஆரம்பித்தது. ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு அகதா கிரிஸ்டியை சிறிது நேரம் படித்துவிட்டு நான் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தபோது காலை மணி 8 ஆகிவிட்டது. சிறிது நேரம் கழித்து என் மனைவி எடுத்து வந்த கேரட் சாறை வாங்குவதற்காகத் திரும்பியபோது “என்னங்க இது, உங்க இடது கண் ஒரே ரத்தச்சிவப்பா மெட்ராஸ் ஐ மாதிரி இருக்கு”.



எனக்கு கண் உறுத்தலோ எரிச்சலோ எதுவும் இல்லை. கண்ணாடிமுன் நெருங்கிப் பார்த்தபோது இடது கண் செக்கச் செவேல். எனக்கு முன்பே கண் நீர் அழுத்த பிரச்சினை உண்டு.

 அன்று மதியமே புதுச்சேரி தவளகுப்பம் அரவிந்த் கண் மருத்துவ மனைக்குப் புறப்பட்டேன். அது சாதாரண கண் நோயைவிட மோசமாக இருக்கும் என்று பயம். டாக்டர் ஏதும் சீரியஸ் என்று சொன்னால் அது வீட்டம்மா காதில் விழவேண்டாம் என்று நினைத்ததால், துணைக்கு வருவதாகச்சொன்னவரை  மறுதளித்துவிட்டுப் புறப்பட்டேன். TVS 50 யில் , மருத்துவமனையை அடையும்போது மாலை மணி 3.30 ஆகிவிட்டது.

கண்ணைப் பரிசோதித்த நர்ஸ் கண் பார்வையில் மாற்றமில்லை எனவும் கண்ணாடியை படிப்பதற்கு மட்டும் பயன் படுத்தும்படியும் சொன்னார். இரண்டு கண்களிலும் லேசர் சிகிச்சைசெய்து உள்ளே லென்ஸ் வைத்திருப்பதால் தூரப் பார்வையில் பிரச்சினை இல்லை.

அந்த அறையிலிருந்து Glaucoma Clinic குக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்த நர்ஸ் என்னையும் இன்னொருவரையும் உள்ளே அழைத்துச்சென்று “தாத்தா, நீங்க இந்த சேர்ல உட்காருங்க, தாத்தா நீங்க அந்த சேரில் உட்காருங்க” என்றார். ஒரு இருக்கை மேசை பக்கத்திலும் இன்னொன்று சுவர் அருகிலும் இருந்தது,

எனக்குக் குழப்பம், எதில் உட்காருவது என்று. ”ஏம்மா, தாத்தா1 இதில் உட்காருங்க, தாத்தா2 அதில் உட்காருங்க என்று சொல்லி இருக்கலாமே” என்றேன். நர்ஸ் சிரித்தவாறே, “கண்ணாடி தாத்தா இங்கே உட்காருங்க, கண்ணாடி போடாத தாத்தா அங்கே உட்காருங்க” . நான் தான் கண்ணாடி இல்லாத தாத்தா. இப்போது சிரிப்பது என் முறை.

டாக்டர் கண்ணைப் பரிசோதித்துவிட்டு ”ரத்தநாளத்தில் இருந்து ரத்தம் கசிவதால்தான் கண் சிவப்பாக இருக்கிறது” என்ற அரிய கருத்தைச் சொன்னார். அடுத்து பயப்படுதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். நர்ஸ் அவர் பங்குக்கு கண்ணில் நீர் (drops) வார்த்தார்.

ஒரு மணி நேரம் சென்று தேவையான மருந்துகளை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது இருட்டிவிட்டது.
சாலைக்கு வந்து பார்த்தால் விளக்குகள் எல்லாம் கண்ணைக் கூசுமளக்கு பிரகாசமாகவும் வெளிச்சம் குறைவான பகுதிகள் ஒரே இருட்டாகவும் தோன்றின. முக்கிய சாலையை அடைந்து வண்டியை இடது புற ஓரமாக,தெளிவான இடங்களில் வேகம் கூட்டியும் (30 கி.மீ!) இருளான பகுதிகளில் சற்று சீராகவும் ஓட்டிவந்தேன். பிராந்திக் கடைகளுக்குஅருகில் திடீரென்று ஆட்கள் முளைக்கும்போது ப்ரேக் அடித்து சமாளித்தேன்.

கன்னியகோவிலை நெருங்கும்போது பிராந்திக்கடையில் இருந்து சாலையைக் கடக்கமுயன்ற குடிமகன் “இந்த வயசில பெரிசு தண்ணி போட்டுட்டு வண்டியில் ஏறி பண்ற அலம்பலைப் பாத்தியா” என்று பாராட்டினார். கூட இருந்த ஆள் (வரும் குடிமகன்தான்) “ கிழவா பத்திரமா வீட்டுக்குப் போய்ச்சேர்” என்று வாழ்த்தினார்.

முள்ளோடை வந்து பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தினால் பையன், “தல, எவ்வளவு போட” என்றான். என் தலையில் முடி இல்லாவிட்டாலும் அதையும் ஒரு தலையாக ஏற்றுக் கொண்டவனை நன்றியுடன் பார்த்தேன். தல என்றால் நடிகர் அஜித்தைத்தானே குறிக்கும்?. கொஞ்சம் யோசித்தபோது அந்தப் பையன் தலைவா என்பதைத்தான் சுருக்கி இருக்கிறான் என்ற உண்மை புலப்பட்டது.

ஒருவழியாக (one way இல்லைங்க!) வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஆளாளுக்கு நான் தனியாக கண் ஆஸ்பத்திரிசென்று வந்ததை எதிர்த்து கண்டனத் தீர்மானம் போட்டார்கள். இனிமேல் அதுபோல் செய்வதில்லை என்று உறுதி மொழி கொடுத்ததும், போனால் போகட்டும் என்று விட்டு விட்டார்கள்.

தலைப்பார்த்துவிட்டு என்னமோ விஷயம் என்று நீங்கள் இங்கே எட்டிப்பார்த்திருந்தால் I am very sorry!

படங்கள் : அரவிந்த் கண் மருத்துவமனையும் எதிரே உள்ள அழகான தோட்டமும்.