கனவிலே வெகு நேரமாய், காற்றிலே ஏன் பறக்கிறாய் ?
தென்படும் வேளையில், தென்றலாய் ஏன் மாறினாய் ?
என கேட்கையில், பின்தொடர்கையில், பூஞ்சோலையில், சென்று ஒளிகிறாய்
ஒளிர்வதும், பின் ஒளிவதும், இவள் விண்மீன்,
விடை கூறினாய்!
நாம் போகிற வழியிலே, பூக்களை நீ
கொய்கிறாய்
கொய்கிற பூக்களை நம் சாலையில் விரிக்கிறாய்
நாணத்தில் நிற்கிறாய், பூஞ்சோலையில் ஒரு மலர்
பூவென, உனை பறிக்கையில், முள்ளாய் ஏன் குத்தினாய் ?
பார்த்ததும் ஏன் தொடரணும், என இலக்கணம் கேட்கிறாய்
கேட்டதும் சொல்ல முடியுமா, என் தயக்கத்தை உணர்கிறாய்;
கேள்விக்கு விடை சொல்லவா, இல்லை கேட்காத கதையை கூறவா?
காட்சியை மறந்த என் கண்கள், அதில் மயக்கத்தை பார்க்கிறாய்!
மெய்யிலே ஒரு உயிரென, உன்னைத் தொடரவே, நான் முயல்கிறேன்;
இதை உணர்த்தவே தமிழ் இலக்கணம், என்னை புலவனாய், ஏன் மாற்றினாய்?
கேள்விகள் பல கேட்கிறாய், என சொல்லியே மீண்டும் பறக்கிறாய்.
கேள்வியில் இது பாதி தான் என சொல்லும் முன்னே மறைகிறாய்;
காற்றிலே, வெகு வேகமாய், செல்லும் பறவையில் நீ ஒரு வகை
தடம் மாறுமோ விண்ணில் பார்க்கிறேன், ஏமாற்றமே என எண்ணினேன்;
தூரத்தில், வந்து நிற்கிறாய், என் ஏமாற்றத்தை ஏமாற்றினாய்.
பேசவா மொழி இல்லை, பார்வையில் ஏன் பேசினாய்?
புரியவே சிறு தாமதம், இதை புரிந்தவன் சில ஆயிரம்;
பழகவா இல்லை பார்க்கவா, என கேட்டதில் பிழை காண்கிறாய்.
இரவிலும் பகலினும் ஒரு மாற்றமே இல்லையே;
பசியெனும் ஒரு கதையினில் வார்த்தைகள் இல்லையே.
தூக்கமும் பொய்த்திடும், கனவுகள் இல்லையே
நினைவினில் நீ மட்டுமே, வேறு சிந்தனை இல்லையே
உன்னை பார்த்திட, தினம் எதிர்பார்த்திட பல நாட்களும் போகுதே;
ஓடிடும் கடிகாரத்தில், உயிரோட்டமும் இல்லையே
போதுமே இந்த தொடர்கதை, எழுதிடு ஒரு முடிவுரை.
புது கதைகள் நூறாயிரம், எழுதிட வேண்டும் தினம் தினம்;
புன்னகை பூக்கிறாய், என் இருளினை போக்கினாய்;
எழுதிடும் புது நினைவினில், என்னை உயிருடன் கொல்கிறாய்.
நகைச்சுவை நினைவில்லை, சிரிப்புக்கு குறையில்லை
வார்த்தைகள் நினைவில்லை, மகிழ்ச்சியில் புறம் மறக்கிறோம்!
மின்னிடும் உன் கண்ணிலே, கண்கொட்டாமல் நம்மை பார்க்கிறேன்
பார்த்தது பல விசித்திரம், அந்த காட்சியில் பல நிறம்;
கேட்டது ஒரு நொடியில்லை, வேண்டுமே ஒரு யுகம்.
வாழ்ந்திட இவளுடன், இல்லை வாடுமே என் மனம்!