கீழே உள்ள கவிதை என்னுடைய நண்பர் திரு. லக்ஷ்மி காந்தன் எனக்கு 1993-ம் ஆண்டு பொங்கல் வாழ்த்தாக அனுப்பியது. அவர் நண்பர்கள் அவரை நெருப்புக்கவிஞர் என்று பாராட்டுவார்கள் இக்கவிதையை அவர் அச்சடித்து பொங்கல் வாழ்த்தாக அனுப்பினார். அவர் சென்னையில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியொன்றில் முதுகலை உதவியாளராக பாடம் நடத்தி வந்தார். அவர் என்னுடைய பால்ய நண்பர். நாங்கள் இருவரும் நெய்வேலியில் இருந்தபோது பள்ளியில் வகுப்புத்தோழர்கள்.பின் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நான் விவசாயம் படித்தபோது அவர் விலங்கியல் படித்தார். பின் சென்னைக்கு வந்து முதுகலை மற்றும் M.Ed முடித்து ஆசிரியப்பணியில் சேர்ந்தார். நான் சென்னையில் பணி புரிந்தபோது அடிக்கடி சந்தித்து அளவளாவி வந்தோம். விருந்தோம்பலில் அவரையும் அவர் மனைவியையும் மிஞ்சுவதுகடினம். என் திருமணத்திற்கு முன் ஒரு தீபாவளி யன்று அவர் அழைப்பிற்கிணங்கி நாள் முழுவதும் அவர் வீட்டில் ஒருவராகத்தங்கி பண்டிகை கொண்டாடியதையும் என் திருமணத்திற்கு அவர் மாப்பிள்ளை தோழனாக கூட இருந்து நல்கிய உழைப்பையும்,ஒத்துழைப்பையும் மறக்க இயலாது. என் பணி காரணமாக நான் பல ஊர்களுக்கு மாற்றலாகிச்சென்று மதுரையில் இருந்தபோது இந்த வாழ்த்து வந்தது. இக்கடிதம் வந்து சில மாதங்களில் அவர் உடல் நலமின்றி இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். அச்செய்தி எனக்குத்தாமதமாகத்தான் தெரிந்தது. அச்சமயம் நான் vertigo என்னும் நோய் காரணமாக மருத்துவமனையில் 3 வாரங்கள் இருந்துவிட்டு பணிக்கு திரும்பியிருந்தேன் எனவே அவருடைய நண்பர்கள் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த நினைவஞ்சலியில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. எனக்கு வரும் கடிதங்களில் முக்கியமானவற்றை பாதுகாத்துவைக்கும் பழக்கம் உண்டு. இந்த வாழ்த்துக்கடிதமும் அதற்கு நான் கவிதை வடிவில் அனுப்பிய பதில் கடிதமும் என்னுடைய பழங்கணக்கை தணிக்கை செய்தபோது கிடைத்தன.
இக்கவிதையை என் மறைந்த நண்பர் கவிஞர் காந்தன் அவர்கள் நினைவாக இந்த வலையில் பதிக்கிறேன். அவர் தீவிர திமுக உறுப்பினர். இந்த வாழ்த்து வந்தபோது திமுக ஆட்சியில் இல்லை. அப்போதைய அதிமுக ஆட்சியின்மேல் அவருக்கிருந்த கோபத்தை இக்கவிதை காட்டுகிறது.
ஏது பொங்கல் ?
மதுப்பொங்கல் தமிழகத்தின் தெருக்கள் தோறும்
மதப்பொங்கல் வட நாட்டில் வீடுதோறும்-இதில்
எது பொங்கல், ஏது பொங்கல் தமிழனுக்கு ?
எங்கே பார்த்தாலும் வறுமை, வன்முறை.
உதய சூரியனின் ஆட்சியில்லா இந்த நாட்டில்
ஒருநாளும் நமக்கினிமேல் பொங்கலில்லை.
இதய தெய்வம் கலைஞரின் ஆட்சி வரும்
இனிய நாளே நமக்கெல்லாம் பொங்கலென்பேன்.
ஒத்தை ரூபாய் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டு-தமிழகத்தை
ஒரேயடியாய் விலைபேசி விற்கின்றார்-தமிழனோ
சொத்தைபோல் வாழ்ந்துகொண்டு சோற்றுத்துருத்தி
தொன்னைகளாய் அலைகின்றான்- இவனுக்கு
இத்தரையில் பொங்கலெல்லாம் ஏன்,எதற்கு?
எருமைகள்போல் உணர்ச்சியின்றி திரிகின்ற
மட்டித் தமிழர்கட்கு மானம் வரும் வரையில்
மறந்திடுவோம் பொங்கல்வைக்க கொஞ்ச நாட்கள்.
ஆரியம்தான் இந்த நாட்டை ஆட்சி செய்யும்;
அடிமைகளாய் தமிழனெல்லாம் கால்வீழ்ந்து,
வீரியமில்லா, விலங்குகளாய் வாழ்வோமெனில்,
வீணாக நமக்கெதற்குப் பொங்கல் நாள் ?
எரிமலையாய் தமிழன் இந்த நாட்டில்
என்றைக்கு எழுகிறானோ-அன்றுதான்
உரிமையுடன் பொங்கல் வைப்போம்-அதற்கு
ஒப்பரிய கலைஞர் பின் அணிவகுப்போம்.
- கவிஞர் காந்தன், M.A.,B.S.c.,M.Ed.
செயலாளார்
சேப்பாக்கம் தி.மு.க இலக்கிய அணி
சிந்தாதிரிப்பேட்டை,சென்னை - 600 002.
இதற்கு நான் அனுப்பிய பதில் அடுத்த பதிவில்.
No comments:
Post a Comment