அதேபோல் ஒரு அலுவலகத்தில் பெரிய அதிகாரியின் கையெழுத்தில் வெளிவரும் கடிதம்,குறிப்பு.,சுற்றறிக்கை இவற்றில் காணப்படும் தவறுகள் clerical error என்று அழைக்கப்படும்.ஒரு அதிகாரியால் எழுதப்பட்டு அதற்கு மேல் இரண்டு மூன்று அதிகாரிகள் சரிபார்த்து (!) வெளியிடப்படும் அறிக்கைகளில் உள்ள தவறுகளும் அலுவல் உதவியாளரின் தவறுகளாகத்தான் சித்தரிக்கப்படும்.
ஒரு அலுவலகத்தில் ஒரு தவறான குறிப்பை மேல் அலுவலகத்துக்கு அனுப்பி அங்கே அத்தவறு சுட்டிக்காட்டப்பட்டால் கீழே இருப்பவர்கள் “ it was sent by mistake” என்று பதில் எழுதிவிடுவார்கள். யாருடைய தவறு என்பது அலசப்படாமல் சிதம்பர ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
செய்த தவறை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையும் அதற்காக வருந்தும் மனப்பாங்கும் அரிதாகிவிட்டது. கூடியவரையில் தவறுகளை மறைத்து சுத்தமாக (clean) காட்டிக்கொள்வதும்,கண்டுபிடிக்கப்பட்டால் அதை அடுத்தவர் தலைமேல் சுமத்துவதும்,பொறுப்பாளியாக்கப்பட்டால் செய்த தவறை நியாயப்படுத்துவது,அதுவும் முடியாதபோது அடுத்தவர் செய்த இதே போன்ற தவறை முன்னுதாரணமாகக்காட்டி தன்னுடைய தவறு ஒன்றுமே இல்லை என்பதாகக்காட்டுவதும் வழக்கமாகிவிட்டது..
கொள்கையை மாற்றிக்கொண்டு யாரிடம் வேண்டுமானாலும் கூட்டு வைத்துக்கொள்வார்கள். அதைக் காலத்தின் கட்டாயம் என்றோ அல்லது, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை,நிரந்தரப் பகைவனும் இல்லை என்றோ சப்பைக்கட்டு கட்டுவார்கள். கூட்டாளிகள் எதிராளிகளாகவும், எதிராளிகள் கூட்டாளிகளாகவும் மாறி மாறி வருவது சந்தர்ப்பவாதம்தான்.
தன்னுடைய கூட்டணியை முன்னேற்ற அணியாகவும், எதிரணியைப் பிற்போக்குவாதிகளின் கூட்டம் என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்வார்கள். இதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் எதிரணியினர் பேசிய பேச்சுக்களைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். சில கொள்கைப்பிரகடனங்கள் சிலகாலத்துக்கு மட்டும் சொந்த நலனுக்காகப் பாராட்டப்படும். பிறகு அதைக் கிடப்பில் போட்டு விடுவார்கள். எல்லாரும் அதை மறந்து விட்டாலும் தங்கள் சுயதேவைக்காக அவற்றைத் தூசு தட்டி எடுத்து அவற்றுக்காக தங்கள் உயிரையும் கொடுக்கத்தயார் என்று முழங்குவார்கள். காலங்கள் மாறும்போது மக்களின் மதிப்பீடுகளும்,நிலைப்பாடுகளும்,கொள்கைப்பிடிப்புகளும் மாறுவது இயற்கை. இதை ஏற்றுக்கொண்டு,தங்கள் முந்தைய நிலைப்பாடு தவறு என்று ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை இங்கு யாரிடமும் இல்லாமல் போனது பரிதாபம்.
மக்களாட்சியில் கட்சித்தொண்டர்களுக்கும் ஊழலில் பங்கு கிடைத்தால் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு “வாழ்க” போடும் மனப்பன்மை வந்துவிட்டது. பொது மக்களும், அரசு அலுவலகங்களிலும், மற்ற இடங்களிலும் காணப்படும், ஒழுங்கீனங்கள், தவறுகள், ஊழல்கள் இவற்றைப் பெரிதாக எண்ணாமல் பேரம் பேசி,குறைந்த செலவில் (லஞ்சம் என்று பொருள் கொள்க) தங்கள் காரியத்தை நிறைவேற்றி தங்கள் சாமர்த்தியத்தை தாங்களே மெச்சிக்கொள்கிறார்கள்! எனவே தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை பழக்கவழக்கங்களாகி, பின்னர் நமது கலாசாரமாக மாறும் அவலத்தையும் பார்க்கிறோம்.
எம் ஜி ஆர் ஒரு படத்தில் ”தவறு என்பது தவறிச் செய்வது,தப்பு என்பது தெரிந்து செய்வது” என்று பாடுவார். இப்போது எல்லோரும் விவரமானவர்கள் . தெரிந்தே, (அடுத்தவர்க்குத் தெரியாமல்!) தப்பு செய்கிறார்கள்.
இவை தவறா, தப்பா என்று எனக்குத்தெரியவில்லை. இந்தப்பதிவில் உள்ள பிழைகளுக்கு நான் பயன்படுத்தும் கணினி தான் காரணம். அதற்கும் வயதாகிவிட்டது!
3 comments:
good one!
Super Raj. Classic Post.
நன்றி தமிழினி அவர்களே.நான் எப்போதாவது ஏதாவது எழுதுபவன். புதிய உத்திகளைக் கையாளும் திறைமையோ,அவற்றைக் கற்றுக் கொள்ளத்தேவையான நேரமோ இல்லாதவன்..அழைப்புக்கு நன்றி.
Post a Comment