Saturday, June 30, 2012

திரு A ஷண்முகம்.


எனது நண்பர் திரு A ஷண்முகம், M.E,
(Retired Professor of Engineering, Coimbatore.

1967 ம் வருடம் நான் கோவை விவசாயக்கல்லூரியில் எம் எஸ்சி வகுப்பில் சேரும் வரை அவரை எனக்கு அறிமுகம் இல்லை.நான் படிப்பு முடிந்து அங்கேயே வேலையில் சேர்ந்தபோது திரு ஷண்முகம் அவர்கள் அறிமுகமானார்.அவர் பொறியியல் துறையில் பணிபுரிந்துவந்தார்.நாளடைவில் நாங்கள் இருவரும் ஒரே அலை வரிசையில் சிந்திப்பதையும் பேசுவதையும் உணர்ந்து  ஒருவர் பால் ஒருவர் அன்பும் பாசமும் வளர்ந்தன. 1973ம் ஆண்டு நான் விவசாயக்கல்லூரி வேலையை விட்டு (என்ன முட்டாள்தனம்!) வங்கியில் சேர்ந்த போது அவரைப் பிரிந்தேன் பின்னர் 1979ம் ஆண்டு எனக்கு கோவைக்கு மாற்றல் வந்த போது பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததென மகிழ்ந்தேன். அடுத்த பிரிவு 1982ல் நான் ஈரோட்டுக்கு மாற்றலானபோது. E C TV  விளம்பரத்தில் அப்போதெல்லாம் வரும். “Time will tell the difference” அது எவ்வளவு உண்மை.அவரை நேரில் பார்த்து பல வருடங்கள் ஆன் பின்னும் அவரது நினைவுகள் மிகவும் பசுமையாக இருக்கின்றன. அவரை நினைத்து எழுதிய கவிதை இங்கே.

சரிபாதி நாமிருவர் எனப்பாடும் சண்முகனைப் பாடு மனமே,
சதி,பதிக்கு மேலான நட்பைப் போற்று மனமே.
பொங்கு கடல்போல, விரிந்த மனம் கொண்டவனே,
இங்கு நீ இல்லை யென்றால் ஏதேதோ இழந்திருப்பேன்..

ஒரு கோடிப் பேர்களிலே ஒருவனிவன்,
பொருள் தேடி பெறுவதுபோல் பெற்றேனிவனை.
மறுபிறப்பு இல்லாத வாழ்வு வேண்டும் இருந்தால்
ம்றுபடியும் இவனோடு பிறக்கவேண்டும் !


பதுமைபோல் அழகு,பளிச்சென்ற நிறம்,வேங்கை போல் வீரம்.
இதுவெல்லாம் இல்லை இவரிடம்; ஆனால் என்ன?
பால் போல் தெளிந்த உள்ளம்,ஆல் போல் பரந்த அன்பு,
வேல் போல் கூர் அறிவு,உற்றார்க்கு உதவும் பண்பு
உள்ளதே ஏராளம் தான்.


ஆங்கிலம் படிக்க என்றால் அலறுவோர் மத்தியிலே
இங்கிலீஷ் கதைகள் படிக்க எனக்குக் கிடைத்த தோழன்.
ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் என்றால் எனக்குயிர்,
அவருக்கும் தான்!

நகைச்சுவை என்றால் என்ன? கேட்போர் பலபேர்
அச்சுவை அறிந்த நண்பர், அடிக்கடி சிரிப்பார்
நம்மையும் சிரிக்க வைப்பார்.அவரை நான் boss என்பேன்
என்னை அவர் boss  என்பார்!
சுற்றி இருப்பவர்கள் யாருக்கு யார் boss என்று
இரு முடி பிய்த்துக்கொள்வார்,எனக்கொன்று அவருக்கொன்று!

அன்பான மனைவியும்,பாசமிக்க மகளும்,
ஆசைக்கோர் பேத்தியும் பெற்ற நண்பர்:
தூரங்கள் பிரித்தபோதும் நினைவிலே நிற்கின்ற
நேரங்கள் அதிகம்,ஏனெனில் நல்ல நண்பர்.

அளவோடு பழகும் அன்பர், அவர் கதை வள
வள என்றிழுத்தால் அவருக்கு என்ன தோன்றும்?
அறுத்தது போதும் boss , அடுத்ததை பார்ப்போம் என்பார்.
அடுத்ததை அடுத்ததில் பார்க்கலாமா?


Sunday, June 17, 2012

பேரு நல்ல பேருதான் !



ஒரு புதிர் போடுவார்கள்.இது உங்களுக்கு சொந்தமான ஒன்று;ஆனால் இதை உங்களைவிட மற்றவர்கள்தான் அதிகம் பயன் படுத்துவார்கள்.
பெயர் என்பதுதான் விடை.


நான் பிறந்த சில மாதங்கள் வரை எனக்கு யாரும் பேர் வைக்க வில்லை. பெயர் வைத்தல் என்ற சடங்கு ஒன்றும் கிடையாது. பிறந்த குழந்தையைப் பார்க்க வருபவர்கள் கண்ணு. பாப்பா, தங்கம் என்று அவரவர் இஷ்டப்படி கொஞ்சுவார்கள். எங்கள் வீட்டில் எனக்கு முன் பிறந்தவர்கள் என் அண்ணன் மற்றும் ஒரு அக்கா . நான் இளையவன். எனவே. சின்தம்பு (சின்னத் தம்பி) என்று குறிப்பிடப்பட்டேன். ஒரு வருடத்திற்குப் பின் பக்கத்து ஊரில் உள்ள முருகன் கோவில் குருக்கள் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். கோவில் திருவிழா என்றால் நன்கொடை போல ஏதாவது வந்து வாங்கிப்போவார். அவர் ஜாதகமும் கணிப்பார். என் அப்பா அவருடன் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது எங்கள் பெரியப்பா எனக்கு ஜாதகம் கணிக்க வேண்டும் என்ற விஷயத்தை என் அப்பாவுக்கு நினைவு படுத்தவும், குருக்கள் அதற்கென்ன, பிறந்த தேதி, நேரம் எல்லாம் சொல்லுங்க அப்படியே போன வருஷப் பஞ்சாங்கத்தைக் கொண்டுவாங்க என்றார்.

எங்கள் வீட்டில் ஜாதகம் குறித்து வைப்பதற்காகவே ஒரு நோட்டுப் புத்தகம் (80 பக்கம்) உண்டு. அதையும் முந்தைய வருடத்து பாம்பு பஞ்சாங்கத்தையும் (அதன் அட்டையில் பாம்பு படம் போட்டிருக்கும்) என் அப்பா கொண்டு வந்து கொடுத்ததார். நோட்டுப் புத்தகத்தில் என் அண்ணன், அக்கா ஜாதகங்களுக்குப் பின் உள்ள ஒரு பக்கத்தை எடுத்த குருக்கள், குழந்தை பேரைச் சொல்லுங்க, என்றதும்தான் அதுவரை எனக்குப் பேர் எதுவும் வைக்கவில்லை என்பது தெரிய வந்தது. என் அம்மா, கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு நீங்களே நல்ல பேரா ஒண்ணு சொல்லுங்க சாமி என்றார்களாம்.. குருக்கள், நம்ம கோவில் சாமி பேரையே வச்சிக்கலாமா? என்று கேட்டதும் , முருகனா ? என்று என் அப்பா கேட்க அவர் சுப்ரமணியர்தான் கோவில் மூலவர். சுப்ரமணியம்னு எழுதிக்கிறேன் என்று நோட்டுப் புத்தகத்தில் எழுதிவிட்டு பஞ்சாங்கம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். அன்றிலிருந்து நான் சுப்பிரமணியம் என்று  (சிலரால் சுப்ரமணி என்றும்) குறிப்பிடப்பட்டேன்.

விஜயதசமி அன்றைக்கு எங்கள் ஊரில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் என்னைச் சேர்த்தார்கள். ( எனக்கு புதுச் சட்டை, டிராயர் எல்லாம் மாட்டி ஒரு தாம்பாளத்தில் அரிசி, வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, அதில் தட்சணையாக காசு (அரை ரூபா) வைத்து வாத்தியாரிடம் கொடுத்து “பையனைப் பார்த்துக்குங்க என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்,அப்பா.
 அவர் போனதும் வாத்தியார் ’ ஏய் , ஒன் பேரென்ன என்றார். நான் ’சுப்பிரமணியம்’ என்றதும் வாத்தியாருக்கு சப்பென்று ஆகிவிட்டது. அவருக்கு கடவுள் பக்தி அதிகம். சுப்ரமணியர் அவருக்கு இஷ்ட தெய்வம் .அந்தப் பெயர் வைத்த பையனைப் பெயர் சொல்லித் திட்டுவதற்குத் தயக்கம். கிருஷ்ணன், பெருமாள் என்றால் பரவாயில்லை !. எங்கள் ஊரில் அய்யனார் கோவிலும்,பெருமாள் கோவிலும் இருந்தாலும் வாத்தியார் அந்தக் கோவிலுக்கெல்லாம் போகமாட்டார்.. தினமும் முருகன் கோவிலுக்குப் போய் வருவார். நடைப் பயிற்சியும் சாமி கும்பிடுவதும் ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று ஊர்ப் பெரியவர்கள் கேலி பேசுவார்கள்.

விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்குப் போகும் பழக்கம் பெரும்பாலோருக்கு இல்லை. வாத்தியாருக்கு சுப்பிரமணியம் என்று கூப்பிடப் பிடிக்கவில்லை. ம் விகுதி மரியாதை கொடுப்பது போல் தோன்றியதால் அவர் சுப்ரமணியன் என்று என்னைக் கூப்பிட ஆரம்பித்தார். வீட்டில் சுப்ரமணியமாகவும் வெளியில் சுப்ரமணியனாகவும் நிலை பெற்றேன்.
 நான் மேல் டிப்புக்காக (4 ம் வகுப்பு !) பக்கத்து ஊரில் இருந்த அரசு ஆரம்பப் பள்ளிக்குச் சென்றேன். மாற்றுச் சான்றிதழ், பிறப்புச்சான்றிதழ் எல்லாம் கிடையாது. தமிழ் எழுத்துக்கள் படிக்கத்தெரிந்தால் அவன் இரண்டாம் வகுப்புக்குத் தகுதி வாய்ந்தவன்.மூன்றாம் வகுப்பு போகும்போது அணில்,ஆடு இலை, உரல், ஊர் என்று வார்த்தைகளையும் ஒன்று முதல் நூறு வரை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். நான் நான்காம் வகுப்பு என்பதால் எனக்கு கூட்டல், கழித்தல் கணக்கு தெரிகிறதா என்று பார்த்துவிட்டு சேர்த்துக்கொண்டார்கள். அப்
பள்ளியில்  மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான். அதில் ஒருவர் தலைமை ஆசிரியர் ! அரசுப் பள்ளி என்பதால் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்த்தர் உண்டு. அதில் எழுதுவதற்காக வகுப்பு ஆசிரியர் என்  பெயரைக் கேட்டதும் சொன்னேன்., “ஏண்டா உங்களுக்கெல்லாம் வேறே பேரே கிடைக்காதா என்றார். கிளாசில் எனக்கு முன்பே இரண்டிரண்டு  சுப்ரமணியன்களூம், ராமலிங்கங்களும் (வடலூர் 4 கிலோ மீட்டர் தான்) கலியமூர்த்திகளும், கலியபெருமாள்களும் இருப்பதைப் பின்னர் தான் நான் அறிந்து கொண்டேன் .அவர்களுக்கு இனிஷியல் வேறு வேறாக இருந்ததால் அதிகம் பிரச்சினை இல்லை. எனக்கு முன்பே வகுப்பில் இருந்த சுப்ரமணியன்கள் இருவருக்குமே இனிஷியல் S தான். அதில் ஒருவனுக்கு தாத்தா பெயரை முன்னால் சேர்த்து N S  என்று வித்தியாசப்படுத்தி இருந்தார்கள். எனக்கும் இனிஷியல் தான். வகுப்பாசிரியர் பிரச்சினைக்கு தீர்வாக என் பெயரையே மாற்றிவிடலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தார். உனக்கு சுப்ரமணியன் என்ற பேர் வேண்டாம்., வேறு நல்ல பெயராக வைத்துக்கொள், என்று அறிவுறுத்தினார் .அது எங்கள் ஊர் சாமி பெயர் என்றதும் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டு, மாத்தி (!) யோசித்தார். சரிடா, உன் பெயரை பால சுப்ரமணியன் என்று எழுதிக்கொள்கிறேன் என்று பிரச்சினைக்கு தீர்வு கண்டார். எனக்கும் அது ஏதோ பட்டம் வாங்கியதைப்போல் பிடித்திருந்தது. இப்படி ஒரு வருஷம் பள்ளியில் பாலசுப்ரமணியனாகவும் வீட்டில் சுப்ரமணியமாகவும் தொடர்ந்தேன். அடுத்த ஆண்டு 5 ஆம் வகுப்புக்கு போனதும் தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியராக இருந்தார். அவருக்கு ஏனோ என் பெயரில் ஒரு பிடிப்பு  இல்லை. நான் நல்லா படிக்கிற பையன் என்று பெயர் வாங்கியிருந்தேன். அவருக்கு பால சுப்ரமணியன் ரொம்ப சாதாரணமாகத் தெரிந்தது. யாருடா உனக்குப் பேர் வச்சா?
நான் பால சுப்ரமணியன் ஆன கதையை சொன்னதும் அவருக்குச் சிரிப்பு வந்து விட்டது.  சுப்ரமணியன் என்று மொட்டையாய் (?) இருப்பதை விட பால சுப்ரமணியன் பரவாயில்லை. என்று அபிப்ராயப் பட்டார். ஆனால் பால சுப்ரமணியன் என்றொரு பணக்கார வீட்டுப்பையன் அந்த வருஷம் வகுப்பில் சேர்ந்திருந்தான். அதற்கு முன் அவன் வெளியூர் பள்ளியில் 5 ஆம் வகுப்பில் பெயில் ஆகி இந்தப் பள்ளிக்கு வந்திருந்தான். நான் கொஞ்சம் புத்திசாலிப் பையன் என்பதால் எனக்கும் அதே பெயர் இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அவனைவிட என் பெயரை சிறப்பாக மாற்றி விடுவது என்று முடிவெடுத்தவர்., ஒரு நாள் பள்ளி விட்டதும் என்னை அருகில் அழைத்து உன்னை வீட்டில் எப்படிக் கூப்பிடுவார்கள் என்றார். சுப்ரமணியம் என்று கூப்பிடுவார்கள் என்றேன். அவர் உடனே நான் நிறைய சுப்ரமணியன் பேர் சொல்கிறேன், உனக்கு பிடிச்சதை வச்சிக்கலாம் என்றார்..

சங்கர சுப்ரமணியன், வேங்கட சுப்ரமணியன், ஹரிஹர சுப்ரமணீயன்,சுந்தர சுப்ரமணியன்,வடிவேல் சுப்ரமணியன், ராம சுப்ரமணியன், மயிலேறும் சுப்ரமணியன், சூர சம்ஹார சுப்ரமணியன், என்று 108 போற்றி போல அவர் சொல்லிக்கொண்டே போனார். எனக்கு எதுவும் தோன்றவில்லை. என்ன ராஜா நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ சும்மா இருக்கே, என்றார். என் மனதில் ராஜா என்ற வார்த்தை மிகவும் கவர்ச்சியாக இருந்தது. சரி சார், நான் அதையே வச்சிக்கிறேன் என்றேன். சூர சம்ஹார சுப்ரமணியனா,கொஞ்சம் நீளமா இருக்கும் பரவாயில்லையா? “ இல்லை சார், ராஜான்னு சொன்னீங்களே. “ ராஜாவா, அதுவும் நல்லாதான் இருக்கு,ஆனா சாமி பேர் இல்லையேன்னார்.. “ இல்லை சார் என் பெயர் கூட ராஜாவைச்சேர்த்து வச்சிக்கிறேன் என்றேன் . அதுவும் சரிதான் பேரிலாவாது ராஜா இருக்கட்டுமே. . சுப்ரமணிய ராஜா என்று சொல்லிப் பார்த்தார். ராஜா, முன்னாடி வச்சா அழகா இருக்கும்., என்று அப்போதே வருகைப் பதிவேட்டில் பெயருக்குமுன் ராஜாவைச் சேர்த்தார். நான் 5 ஆம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்புக்கு கடலூரில் உள்ள உயர் நிலைப் பள்ளிக்குப் போக ஆங்கிலத்தில் டிசி கொடுக்கும்போது ராஜாவுக்கும்  சுப்ரமணியனுக்கும் இடைவெளி இல்லாமல் எழுதி, ராஜா சுப்ரமணியனை, ராஜசுப்ரமணியன் ஆக்கிவிட்டாகள்.

கடலூருக்கு ரயிலில் போய்வருவதற்கு வசதியாக தொண்டைமா நத்தம் என்ற ஊரில் (கடலூரில் இருந்து 12 மைல்) எங்கள் சித்தப்பா வீட்டில் இருந்து பள்ளி சென்று வந்தேன்.அந்த ஊர் மாந்தோப்பு, தென்னந்தோப்பு, நஞ்சை வயல்கள் என்று மிகவும் அழகாக இருக்கும். என்னைப்பற்றி நானே பெருமையாக சொல்லிக்கொள்ளக் கூடாது என்றாலும், என் சிந்தனை அந்த வயதுக்கு மீறியதாக  இருந்தது. எந்த ஒரு விஷயத்தையும் மாற்றி வேறு மாதிரி செய்தால் என்ன என்று புதுப் புது யோசனைகள் தோன்றும். என் நண்பர் வட்டத்தைத் தாண்டி அவை வெளியானதும் சிலர் அதை வைத்துக்கொண்டு என்னை ஐடியா (Idea) சுப்ரமணியன் என்றும், சுருக்கமாக ஐடியா என்றும் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பியுசி வகுப்பில் சேர்ந்தேன். நெருங்கிய நண்பர்கள் ராஜா என்று கூப்பிடவும், குறிப்பிடவும் ஆரம்பித்தனர். வகுப்பில் அடிக்கடி என்னையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு ராணி என்று செல்லப் பேரையும் வைத்து விட்டார்கள்.
அப்போது பேன்ட் பலவகை மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது .தொப்புள்மேல் இருந்து கீழே இறங்கி லோஹிப்பேன்ட் (low hip pant) , காலில் பேன்டை மேல் பக்கம் மடித்து விடும் பழக்கம் போய் அது மொட்டையானது .கால் அகலம் குறைந்து டைட்ஸ் (Tights) ஆனது. முன் பக்கம் பாக்கெட் ஸ்டைல் என்று கருதப்பட்டது. தலை முடியை ஒட்டி வெட்டி க்ரூ கட் (crew cut) என்பது பேஷனாகியது. சிலருக்கு க்ரூ கட் அழகாக இருக்காது. எனவே அதை நக்கலடித்துக் கொண்டிருப்பார்கள். எனக்கு முடி அடர்த்தியாகவும் சுருட்டையாகவும் இருந்ததால் எனக்கு க்ரூ கட் நன்றாக இருக்கும் என்று சலூன் காரர் சொன்னார். சலூன் ஹாஸ்டலுக்குள்ளேயே இருந்த்தது. சலூன் காரருக்கு என் தலை உருண்டையாக் இருப்பதும் , முடி அடர்த்தியாக இருப்பதும் ஒரு சிறப்பான விஷயமாகப்பட்டது. அருமையான தலை என்று சிலாகிப்பார். எக்ஸ்ட்ரா எதுவும் வாங்காமல் எனக்கு தலையில் மசாஜ் செய்வார். ஒரு முறை க்ரூ கட் வெட்டி முன்னெற்றி அருகில் முடியை வெட்டாமல் கொத்தாக விட்டு விட்டு கண்ணாடியில் பாருங்க, என்றார். எனக்கு சுருட்டை முடி என்பதால் அது பந்து போல் அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்த்தது. இது மெட்ராஸ்ல பேஷன் சார்.உங்க தலைக்கு நல்லா இருக்கும் என்றார். அப்படியே விட்டு விட்டேன்

வேளாண் கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடன் பியுசி படித்த சில நண்பர்களும் என்னோடு வகுப்புத் தோழர்களாக இருந்ததால் என் ராஜா பட்டம் தொடர்ந்தது. மற்ற சிலருக்கு என் முன் நெற்றியில் ஆடும் முடிக்கற்றை வித்தியாசமாக இருக்கவே என்னை பஃப் (puff ) என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். சிலர் அது போன்ற முடி வைத்துக் கொண்டால் விரிவுரையாளர்கள் செஷனல் மார்க்கில் (internal marks) கை வைத்து விடுவார்கள் எனப் பயமுறுத்தியும் என்னுடைய தலை முடி ஸ்டைல் பல்கலைக்கழகம் முழுவதும் பேர் வாங்கி விட்டதால் அதை மாற்ற எனக்கு விருப்ப மில்லை. தவிரவும் நான் நல்ல பையனாகவும், நன்கு படிப்பவனாகவும் பெண்கள் பின்னால் சுற்றாதவனாகவும் இருந்ததால் லெக்சரர்களுக்கு என் பேரில் நல்ல அபிப்ராயம் இருந்தது .நான் இறுதி (4 ஆம் ) ஆண்டு படிக்கும் போது என் நண்பர்கள் என்னைக் கல்லூரி பொதுச்செயலர் தேர்வுக்கு நிற்கும்படி வற்புறுத்தி நிற்க வைத்தனர். பல்கலைக்கழக ஹாஸ்டல் சுவர்களில் எல்லாம் VOTE FOR THE PUFF (இரண்டாவது வரியில் Rajasubramanian S Final year BSc(Ag),மூன்றாவ்து வரியில் as General Secretary) என்ற வாசகங்கள்.,சுவர்களில், பேனர்களில் எல்லாம் எழுதி  என் வகுப்புத்தோழர்: நண்பர் ரவீந்திரன் (அவர் எனக்கு தம்பி  நான் அவருக்கு அண்ணாச்சி) தன் கை வண்ணத்தால் என்னுடைய பேரைப் பிரபலப்படுத்திவிட்டார். அப்போதெல்லாம் டிஜிட்டல் பேனர்கள் கிடையாது. ப்ரஷ் வைத்துக் கையால் தான் எழுதவேண்டும். ரவீந்திரன் ஒரு நல்ல ஓவியர். எழுத்துக்கள் அச்சுக் கோத்தாற்போல் இருக்கும். ஒரே வாரத்தில் என் பெயர் பல்கலைக்கழகம் முழுவதும் பிரபலமாகி விட்டது. அது நாள் வரை என் முகம்/பஃப் எல்லோரும் அறிந்திருந்தாலும் நான் வேளாண் கல்லூரியில் படித்ததால் என் இயற் பெயர் மற்ற மாணவ மாணவிகளுக்கு பரிச்சயம் இல்லை.

என் வகுப்புத் தோழர் சேலம் நாகராஜன் என்னை கம்பன் என்று அழைப்பார், நான் அவரைக் கடைசிவரையில் அதற்கு விளக்கம் கேட்டதில்லை. என் பங்குக்கு நான் அவரைக் கம்பன் என்று அழைத்து வந்தேன். ஹாஸ்டல் அறையில் தானியங்கி டோர் ஓப்பனர், மற்றும் வால்வு ரேடியோ காலையில் அலாரம் அடித்ததும் குறிப்பிட்ட ஸ்டேஷனில் இருந்து பாடல்கள் பாடும் படி அமைத்திருந்தேன்..
நான் கோவை சென்று வேளாண் கல்லூரியில் எம்.எஸ்.சி சேர்ந்தபோது அதிக நேரம் லைப்ரரியிலும் லேப்பிலும் செலவழித்ததால் சிலர் ப்ரொஃபஸர் என்றும், சயின்டிஸ்ட் என்றும் கிண்டல் செய்வார்கள்.

எம்.எஸ்.சி முடித்ததும் உதவி விரிவுரையாளராக அங்கேயே சேர்ந்தேன். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் எல்லாம் ஆராய்ச்சிப் பிரிவில் இருந்ததால் என்னை வாத்தியார் என்று அழைக்கவும் மற்றவர்களிடம் குறிப்பிடவும் ஆரம்பித்து இன்றுவரை கோவை நண்பர்கள் அப்படித்தான் கூப்பிட்டு வருகிறார்கள். விதி விலக்காக நண்பர் திரு ஷண்முகமும் நானும்  ஒருவரை ஒருவர் BOSS என்று அழைத்துக் கொள்கிறோம். இது  நாங்கள் படித்த ஆங்கிலக் கதைப் புத்தகத்தில் இருந்து வந்ததா அல்லது அக்காலத்தில் பார்த்த தமிழ்ப் படங்களில் இருந்து வந்ததா என்று நினைவில் இல்லை..

நான் 1973 ம் வருடம் வங்கியில் சேர்ந்த்தபோது எலோருக்கும் நான் SR ஆகி விட்டேன். எனக்கு 1977 ம் ஆண்டு திருமணம் ஆனதும் என் மனைவி, மற்றும் அவர்கள் வீட்டார் அனைவரும் என்னை பாவா என்று குறிப்பிட ஆரம்பித்தனர் . தெலுங்கில்; பாவா என்பது மாமா என்ற பொருளில் வரும். என் மனைவி ஊரில் என் இயற் பெயர் மறைந்து எல்லோருக்குமே நான் பாவா ஆகி விட்டேன்.என்னுடைய பேரப் பிள்ளைகள் கூட என்னை பாவா தாத்தா என்று தான் அழைக்கிறார்கள். பாவா என்பது என் பெயர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் சீனியர் மானேஜராகப் பதவி உயர்வு பெற்று ராஞ்சி (பீகார்
மாநிலம்) அலுவலகம் சென்றதும் என்னை ஜி (சார் )என்றும் ராஜாஜி என்றும் அழைத்தனர். அந்த அலுவலகத்தில் ஷிவ் ரவி என்று ஒரு கிளார்க் இருந்தார். அவர் அங்கே SR என்று எனக்கு முந்திய காலத்தில் இருந்தே குறிப்பிடப்பட்டதால் என்னை RS என்று குறிப்பிட்டார்கள்.

தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்து ஊழியர் பயிற்சிக் கல்லூரி (Staff Training College) பொறுப்பாளராக (College-in-charge) ஆன பிறகு எல்லோரும் சேர்ந்து என்னை SRS  ஆக்கி விட்டார்கள்.

வயசாகிவிட்டதால் கொஞ்சநாள் கழித்து என் பெயர் எனக்கே மறந்துவிடும் என்று பயம்மாக இருக்கிறது. யாராவது, யாரையாவது கூப்பிட்டாலும் திரும்பிப் பார்ப்பேன் என்று நினைக்கிறேன். கீழே உள்ள படம் The Puff ! 1966

”பெயரில் என்ன இருக்கிறது ?” என்று கேட்டார் ஷேக்ஸ்பியர். அவர் சொன்னது சரியா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும் !