Tuesday, September 9, 2008

தனக்கொரு நீதி

நான் சென்ற திங்கட்கிழமை சென்னையில் இருந்து அரசுப் போக்குவரத்துக்கழக பஸ்சில் கடலுர் வந்து கொண்டிருந்தபோது எனக்கு முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த இருவரின் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.அதில் ஒருவர் பஸ்சின் நடத்துனர்,மற்றவர் அவருடைய நண்பர் என்று நினைக்கிறேன்.அவரும் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிபவர்.
இருவரும் சமவயதுக்காரர்கள் . வயது 50 இருக்கலாம். இனி அவர்களின் உரையாடல்.

“ஊர் ரொம்ப கெட்டுபோச்சுப்பா.நேற்று பாண்டியில் நைட் ஹால்ட்.சரின்னு பாருக்கு போனேன்.பதினெட்டு,இருபது வயசு பயல்களா நிறைய இருந்தாங்க. நம்ம மாதிரி வயசாளிங்க ஒருத்தர் ரெண்டுபேர் தான்”

“நீ சொல்றது கரெக்ட்பா. நானும் பார்த்துகிட்டுதான் வர்றேன்.வர வர வாலிப வயசுப்பசங்கள்ளாம் தண்ணியிலே கிடக்கறானுங்க. நம்ம தான் ரிலா க்ஸேஷனுக்குப் போறோம்.”

‘இவங்களுக்கு என்ன கவலை சொல்லு பார்க்கலாம்.பிள்ளையா,குட்டியா?”
“உனக்கு நினைவிருக்கா, SSLC படிக்கும்போது சரக்கெல்லாம் எவ்வளவு சீப்பா கிடைச்சது?”

“அதையேன்பா ஞாபகப்படுத்தறே? அப்பா பாக்கெட்டுல சில்லற நோட்டா கிடக்கும்.ரெண்டை உறுவிட்டா அவருக்கு கணக்கு தெரியாது.ஸ்கூலுக்கு மட்டம் போட்டுட்டு பார்ல ஒக்காந்து போட்டுட்டு போறவர பொண்ணுங்களை டாவடிப்போமே. அது ஒரு காலம்பா”

“ஒரு தபா அப்பாகூட வேல பார்க்கிறவர் பார்ல நம்மள பார்த்துட்டு வீட்டுல சொல்லி மாட்டி வச்சாரே?எங்க அப்பா கண்டுக்கிடல.தாயில்லாப் பையன்னு மெரட்டி உட்டுட்டாரு. ஒங்க அப்பாதான் பெல்ட கழட்டி வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார்.”

“அதுக்கு தான் அவரு சைக்கிள் சீட்டு,டயரு எல்லாத்திலயும் பிளேடு போட்டு அவுருக்கு தெண்டம் வச்சாச்சே.”

“என்னதான் சொல்லு,அப்ப இருந்த மாதிரி ஜாலி இனிமே வராது.”

திண்டிவனம் வந்துவிட்டதால் நடத்துனரின் நண்பர்,”வர்றெம்பா.தங்கச்சியை கேட்டதாச்சொல்லு. பொண்ணுக்கு எப்ப கல்யாணம்,” என்று இறங்கி விட்டார்.

நான் யோசித்துப்பார்த்தேன். இவர்கள் SSLC படிக்கும்போது வயசு 17க்கு மேல் இருக்காது. அப்போது பாருக்கு போவது தப்பாகத்தெரியவில்லை.இந்த வயதில் போவதும் தப்பாகத்தெரியவில்லை.
தன்பிள்ளை வயதுக்காரர்கள் பாருக்குப் போவதும்,வயசுக்கோளாறினால் செய்கிறகலாட்டாக்களும் தப்பாகத்தெரிகிறதா?

No comments: