எங்கிருந்தோ வந்தான்,என்
மனதில் இடம் பிடித்தான்
பக்கத்து இருக்கை,பக்கத்துப் படுக்கை
உணர்வுகள் ஒன்று போல, உள்ளமும் அப்படியே
என் மனத்தின் பிரதியோ இவன்?
என்னைப்போல் எண்ண ஓட்டம்
என்னைபோல் பார்வை, நோக்கம்,
இதமான அன்பு,இனிமையான பேச்சு
இது எல்லாமே அவனோடு போச்சு.
பேச்சு, பேச்சுதான் இரவு முடியும் வரை.
சுற்றுப்புறம்,உறவுகள், உறவினர்,உற்றவர்
பெற்றவர், மங்கையர், மற்றெல்லாம்
எங்கள் பேச்சுக்குப் பொருளாகும்.
எப்போதும் பேச்சு,என்னாதான் பேசுவீர்கள்
என்று கேட்பார்கள் என் வீட்டில்,அவன் வீட்டில்.
சொல்வதற்கு ஒன்றுமில்லை மற்றவர்க்கு-ஆனால்
பேச்சு முடிவதில்லை,பின்னிரவு வெகு நேரம்.
மனக் குறைகள் எனக்கிருக்கும் எத்தனையோ
மறப்பேன் அத்தனையும் இவன் இருந்தால்..
இறவாப் புகழ் என்றால் பொருள் அறியேன்
மறவா நிகழ்ச்சி எத்தனையோ, நான் மறவேன்.
மேகம் இல்லா வானம் போல
ராகம் இல்லா பாட்டைப் போல
சுவையே யில்லா உணவைப் போல
என் நண்பன் இல்லா இவ்வாழ்க்கை
கனவு கலைத்த உறக்கம் போல்
துடுப்பே இல்லா கலத்தைப் போல்
வாலே இல்லா பட்டம் போல்
உயிர்ப்பே இல்லா என் வாழ்க்கை.
காலங்கள் கடந்தபின்னும் கலையாத உன் நினைவு
இதயத்தில் கோலங்கள், அழியுமோ எந்த நாளும்?
உறக்கம் இல்லா இரவுகள்,உறங்கினால் உன் கனவு
உன்னையே நினைத்து என் இரவு நீளும்,நீளும்.
No comments:
Post a Comment