கதை பல தொடர்ந்து சொல்லும்,
ஓய்வின்றி ஓடும்,நடக்கும்-
நிற்பது போலத்தோன்றும்,
நில்லாதோடும்;
துளி நொடிப்பொழுதில் அசையும்-
காலம்
அனைத்தையும் ஆட்டி வைக்கும்.
இளமையில்,இன்பத்தில் பறக்கும் காலம்;
முதுமையில், துன்பத்தில் ஊர்ந்து போகும்.
அளவில்லா காலம்,நேரம்-
நாட்களாய்,மாதமாய்,
வருடமாய், பல்லாயிரம் ஆண்டாய்;
முடிவில்லா இந்த வட்டம்,முடிவது போலத்தோன்றும்.
நிகழ்காலம், இறந்த காலம், வருங்காலம்-
என்றெல்லாம் உண்டா என்ன?
இறவாத காலம்; பின்னெது இறந்த காலம்?
நிலைப்படியில் இடித்துக்கொண்டு,
நிலைப்படி இடித்ததென்று,சொல்லும் உலகம்.
கைநழுவிப் போனதென்று சொல்லக்கூச்சம்-
நாம்
மறந்துவிட்ட காலமே இறந்த காலம்.
எது நல்ல நேரமென்று என்னைக்கேட்டால்
இதுவென்று சொல்லுமுன்னே கடந்து போகும்.
இன்னாளில் ஓட்டம் வேகம்
பின்னாளில் பயனாகும் ;
முயற்சி இல்லையென்றால், முயலும் தோற்கும்.
அளப்பரிய காலம் ஆனால் நாம்
இருப்பதோ கொஞ்ச காலம்.
காலத்தைக் கடன், வாங்க- கொடுக்க
சேமிக்க- இயலாது;
ஆனாலும்,
இருக்கின்ற காலத்தில் நற்செயல்கள்
செய்திட்டால்
காலத்தை வென்று நிற்போம்!